டாஸ்மாக் கடை திறப்புக்கு எதிர்ப்பு: தி.மு.க. கூட்டணி கட்சியினர் கருப்பு சட்டை அணிந்து போராட்டம்


டாஸ்மாக் கடை திறப்புக்கு எதிர்ப்பு: தி.மு.க. கூட்டணி கட்சியினர் கருப்பு சட்டை அணிந்து போராட்டம்
x
தினத்தந்தி 7 May 2020 10:30 PM GMT (Updated: 8 May 2020 2:28 AM GMT)

டாஸ்மாக் கடைகள் திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. கூட்டணி கட்சியினர் கருப்பு சட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி காந்தல், குன்னூர் ராஜாஜி நகர், கோத்தகிரி கடைவீதி, எஸ்.கைகாட்டி, நஞ்சநாடு கீழ் கோழிக்கரை, கக்கன்ஜி காலனி, சேலாஸ் நேருநகர் ஆகிய 7 இடங்கள் கொரோனா வைரஸ் அறிகுறி தென்பட்டதால் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த பகுதிகளை தவிர்த்து மற்ற இடங்களில் நேற்று முதல் டாஸ்மாக்கடைகள் திறக்கப்பட்டு செயல்பட்டன. தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. கூட்டணி கட்சிகளின் தலைவர்கள், பொதுமக்கள் கருப்பு சின்னம் அணிய வேண்டும்.

5 பேருக்கு மிகாமல் 15 நிமிடங்களுக்கு பொதுமக்கள் தங்களது வீடுகளுக்கு வெளியே எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நிற்க வேண்டும் என்று கூட்டாக அறிவித்தனர். அதன்படி, நீலகிரி மாவட்ட தி.மு.க. அலுவலகம் முன்பு கருப்பு கொடி கட்டப்பட்டு இருந்தது. அங்கு மாவட்ட துணை செயலாளர் ரவிக்குமார் தலைமையில் நிர்வாகிகள் கருப்பு சட்டை அணிந்து மதுக்கடைகள் திறந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது டாஸ்மாக் கடைகளை திறக்க ஆர்வம் காட்டும் தமிழக அரசை கண்டித்தும், கொரோனா வைரஸ் பரவாமல் கட்டுப்படுத்துவதில் அரசு அலட்சியம் காட்டுகிறது என்று கோஷங்களை எழுப்பினர். மாவட்ட செயலாளர் முபாரக் குன்னூரில் உள்ள தனது வீடு முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு எதிர்ப்பு தெரிவித்தார். அதேபோல் தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் தங்களது வீடுகள் முன்பு கருப்பு கொடி ஏந்தியும், கருப்பு சட்டை அணிந்தும் எதிர்ப்பை தெரிவித்தனர். மேலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி, ம.தி.மு.க., காங்கிரஸ் கட்சி போன்ற கூட்டணி கட்சியினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் அரசு மதுக்கடைகள் திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் தங்களது வீடுகள் முன்பு நின்று மதுக்கடைக்கு எதிராக கோஷமிட வேண்டும் என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இந்த நிலையில் மாநிலம் முழுவதும் மதுக்கடைகள் நேற்று திறக்கப்பட்டது. இதை கண்டித்து கூடலூர் எம்.எல்.ஏ. திராவிடமணி பந்தலூரில் உள்ள தனது வீட்டின் முன்பு கருப்பு சட்டை அணிந்தவாறு குடும்பத்தினருடன் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அப்பகுதியில் வசிக்கும் மக்களும் தங்களது வீடுகளின் முன்பு நின்று கொண்டு கோஷங்களை எழுப்பினர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story