குமரி டாஸ்மாக்கடைகளில் திரண்ட மதுபிரியர்கள் ஆதார் கார்டை காண்பித்து மதுபாட்டில்கள் வாங்கிச் சென்றனர்


குமரி டாஸ்மாக்கடைகளில் திரண்ட மதுபிரியர்கள் ஆதார் கார்டை காண்பித்து மதுபாட்டில்கள் வாங்கிச் சென்றனர்
x
தினத்தந்தி 8 May 2020 8:00 AM IST (Updated: 8 May 2020 8:00 AM IST)
t-max-icont-min-icon

43 நாட்களுக்குப்பிறகு குமரி மாவட்டத்தில் 100 டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. ஆதார், ரேஷன் கார்டுகளுடன் நீண்ட வரிசையில் காத்திருந்து மதுபாட்டில்களை மதுபிரியர்கள் வாங்கிச் சென்றனர்.

நாகர்கோவில், 

43 நாட்களுக்குப்பிறகு குமரி மாவட்டத்தில் 100 டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. ஆதார், ரேஷன் கார்டுகளுடன் நீண்ட வரிசையில் காத்திருந்து மதுபாட்டில்களை மதுபிரியர்கள் வாங்கிச் சென்றனர்.

மது கிடைக்காமல் அவதி

உலகம் முழுவதும் கொத்து, கொத்தாக உயிர்களை காவு வாங்கும் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க முடியாமல் வல்லரசு நாடுகளே விழிபிதுங்கி நிற்கிறது. இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதியில் இருந்து கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது.

இதனால் தமிழகத்தில் அரசால் நடத்தப்பட்டு வரும் டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள், ஓட்டல் பார்கள் அனைத்தும் மூடப்பட்டன. இதனால் மதுபான பிரியர்கள் மதுபானம் கிடைக்காமல் மிகுந்த அவதிக்குள்ளானார்கள்.

கடைகள் திறக்க அனுமதி

இதை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்தவர்களால், டாஸ்மாக் கடையில் ரூ.600-க்கு விற்கக்கூடிய மதுபாட்டில்கள் ரூ.4 ஆயிரம், ரூ.5 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது. மது கிடைத்தால் போதும் என நினைத்த மதுபிரியர்கள், அந்த தொகையையும் கொடுத்து மதுபானங்களை வாங்கி அருந்தினர்.

இந்த நிலையில் பச்சை மற்றும் ஆரஞ்சு மண்டல மாவட்டத்தில், ஊரடங்கில் சிலவற்றை தளர்த்த தமிழக அரசு உத்தரவிட்டது. இதில், டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்கவும் அனுமதி வழங்கப்பட்டது. இந்த அறிவிப்பு மது கிடைக்காமல் பரிதவித்த மதுபான பிரியர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியது. மேலும் மதுவாங்க சிலவிதிமுறைகள் விதிக்கப்பட்டிருந்தது. என்ன விதிமுறைகள் வேண்டுமானாலும் விதிக்கட்டும், தங்களுக்கு மதுபாட்டில்கள் கிடைத்தால் போதும் என்ற மனநிலையில் இருந்த மதுபிரியர்கள் எப்போது டாஸ்மாக் கடைகள் திறக்கும்? என்ற ஆவலோடு இருந்தனர்.

100 கடைகள் திறப்பு

குமரி மாவட்டத்தில் மொத்தம் 113 டாஸ்மாக் மதுபானக்கடைகள் உள்ளன. அவற்றில் 100 கடைகள் நேற்று திறக்கப்பட்டன. முக்கிய சந்திப்பு, தடை செய்யப்பட்ட பகுதி, குமரி-கேரள எல்லையில் உள்ள மதுக்கடைகள், பெரிய பெரிய மால்களில் உள்ள கடைகள், இரும்பிலி பகுதியில் தீ விபத்து ஏற்பட்ட கடை என மொத்தம் 13 கடைகள் நேற்று திறக்கப்படவில்லை.

திறக்கப்பட்ட ஒவ்வொரு டாஸ்மாக் கடையிலும் கூட்டத்தை கட்டுப்படுத்த பேரிகாடுகள் அமைக்கப்பட்டு இருந்தன. ஒவ்வொரு கடையிலும் அந்தந்த போலீஸ் நிலைய போலீசார், ஊர்க்காவல் படையினர், என்.சி.சி. மாணவர்கள், முன்னாள் ராணுவத்தினர் உள்ளிட்டோர் பாதுகாப்பு பணியையும், கூட்டத்தை ஒழுங்குபடுத்தும் பணியிலும் ஈடுபட்டனர். 21 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மதுபானங்கள் விற்கப்படாது என்ற அறிவிப்பு சுவரொட்டியும் ஒட்டப்பட்டு இருந்தது.

திருவிழா கூட்டம்

காலை 10 மணிக்கு கடை திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தாலும் குமரி மாவட்டத்தில் பெரும்பாலான கடைகளின் முன்பு 10 மணிக்கு முன்பே மதுபான பிரியர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். மதுவாங்குவதில் தள்ளுமுள்ளு ஏற்படாமல் இருப்பதற்காக டோக்கன்கள் ஒவ்வொரு கடையிலும் வினியோகம் செய்யப்பட்டது. அந்த டோக்கனில் உள்ள எண்களின் அடிப்படையில் மதுபிரியர்கள் மதுபானங்களை வாங்கிச் சென்றனர்.

நாகர்கோவில் கோட்டார் ரெயில்வே சந்திப்பு செல்லும் சாலை, ஆயுதப்படை முகாம் அலுவலக ரோடு, அவ்வை சண்முகம் சாலையில் கட்டபொம்மன் சந்திப்பு பகுதி ஆகியவற்றில் உள்ள மதுபான கடைகளில் இளைஞர்கள், முதியவர்கள் என அனைத்து தரப்பினரும் நீண்ட வரிசையில் காத்திருந்து மதுபானங்கள் வாங்கிச்சென்றனர். சில கடைகளில் ஒரு கி.மீ. தூரத்துக்கு நீண்ட வரிசை இருந்ததை காண முடிந்தது. இதேபோல் மாவட்டம் முழுவதும் உள்ள மதுக்கடைகளில் திருவிழா கூட்டம் போல் திரண்டிருந்தனர்.

முத்தமழை பொழிந்தனர்

43 நாட்களுக்கு பிறகு நேற்று மதுக்கடைகள் திறக்கப்பட்டதால் மதுபான பாட்டில்களை கைகளில் வாங்கிய மதுபிரியர்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை என்று சொல்லலாம். சிலர் மதுபாட்டில்களை வாங்கி கைகளில் வைத்துக்கொண்டு முத்தமழை பொழிந்தனர்.

அதே வேளையில் குமரி-கேரள எல்லையோரங்களில் வசிக்கும் குமரி மாவட்ட மக்கள் தங்கள் பகுதியில் மதுபானக்கடைகள் திறக்காததால் பெரும் சோகத்துக்கு ஆளாயினர். சிலர் நீண்டதூரம் சென்று திறந்திருந்த டாஸ்மாக் கடையில் மதுபானங்களை வாங்கி அருந்தினர்.

Next Story