மாவட்ட செய்திகள்

பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறப்புசமூக இடைவெளியை கடைபிடித்து மதுபானங்களை வாங்கிய மதுப்பிரியர்கள் + "||" + Alcoholics who shop at the social gap and buy alcohol

பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறப்புசமூக இடைவெளியை கடைபிடித்து மதுபானங்களை வாங்கிய மதுப்பிரியர்கள்

பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறப்புசமூக இடைவெளியை கடைபிடித்து மதுபானங்களை வாங்கிய மதுப்பிரியர்கள்
பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. பல கடைகளில் சமூக இடைவெளியை கடைபிடித்து மதுப்பிரியர்கள் மதுபானங்களை வாங்கிச்சென்றனர்.
பெரம்பலூர், 

அரியலூர்-பெரம்பலூர் மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. பல கடைகளில் சமூக இடைவெளியை கடைபிடித்து மதுப்பிரியர்கள் மதுபானங்களை வாங்கிச்சென்றனர்.

டாஸ்மாக் கடைகள் திறப்பு

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவால் கடந்த மார்ச் மாதம் 24-ந்தேதி தமிழகத்தில் அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டன. இதனால் மது கிடைக்காமல் மதுப்பிரியர்கள் திண்டாடி வந்தனர். இந்நிலையில் நேற்று முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இதையொட்டி பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் கடைகள் சுத்தம் செய்யப்பட்டு, வர்ணம் தீட்டப்பட்டு புதுப்பொலிவு பெற்றன. மேலும் மதுப்பிரியர்கள் சமூக இடைவெளியை பின்பற்றுவதற்காக தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டு, வட்டம் போடப்பட்டிருந்தன. டாஸ்மாக் கடையின் முகப்பில் சிறிது தூரத்திற்கு சாமியானா பந்தலும் போடப்பட்டிருந்தன.

நேற்று காலை 10 மணிக்கு முன்னதாகவே டாஸ்மாக் கடைகளில் மதுப்பிரியர்கள் திரண்டனர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், ஊர்க்காவல் படையினர், தன்னார்வலர்கள் ஆகியோர் மதுப்பிரியர்களை சமூக இடைவெளி விட்டு வட்டத்தில் நிற்குமாறு அறிவுறுத்தினர். மேலும் அவர்களுக்கு டோக்கன் வினியோகம் செய்யப்பட்டது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 35 கடைகளில் கொரோனா பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள 4 கடைகள் தவிர 31 கடைகள் திறக்கப்பட்டன.

மது பாட்டில்கள் விற்பனை

காலை 10 மணியளவில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதும் வரிசையாக சென்று மதுப்பிரியர்கள் மது பாட்டில்களை வாங்கி சென்றனர். ஒருவருக்கு 750 மில்லி லிட்டர் மது பாட்டில் அல்லது 180 மில்லி லிட்டர் கொண்ட 4 மது பாட்டில்கள் வழங்கப்படும் என்ற அறிவிப்பு ஏற்கனவே டாஸ்மாக் கடையின் அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டிருந்தது. அதில் குறிப்பிட்டவாறு மது பாட்டில்களை மது பிரியர்கள் வாங்கி சென்றனர். முக கவசம் அணிந்து வந்தவர்களுக்கு மட்டும் மதுப் பாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டது.

நேரம் செல்லச்செல்ல டாஸ்மாக் கடைகளுக்கு மது பிரியர்கள் சாரை, சாரையாய் வந்து கூடினர். அவர்கள் நீண்ட வரிசையில் அக்னி நட்சத்திர வெயிலையும் பொருட்படுத்தாமல் கால் கடுக்க காத்திருந்து மது பாட்டில்களை வாங்கி சென்றனர். அவர்களை சமூக இடைவெளியை பின்பற்றி நிற்குமாறு ஒலிபெருக்கியில் அவ்வவ்போது அறிவுறுத்தப்பட்டது. சில டாஸ்மாக் கடைகளில் பெண்களும் மது பாட்டில்களை வாங்கிச்சென்றதை காணமுடிந்தது.

விலை உயர்வு

மேலும் மது பாட்டில்களை வாங்கிய மதுப்பிரியர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் அங்கிருந்து சென்றனர். மேலும் சாதாரண மதுபானங்களின் குவார்ட்டர் பாட்டில் ஏற்கனவே விற்ற விலையில் இருந்து கூடுதலாக ரூ.10-ம், நடுத்தர மற்றும் பிரீமியம் வகைகளை சேர்ந்த மது பானங்களின் குவார்ட்டர் பாட்டில் ஏற்கனவே விற்ற விலையில் இருந்து கூடுதலாக ரூ.20-ம் உயர்த்தப்பட்டு விற்கப்பட்டன.

இதேபோல் சாதாரண ‘ஆப்’ மதுபாட்டிலுக்கு ரூ.20-ம், ‘புல்’ மது பாட்டிலுக்கு ரூ.40-ம் விலை உயர்த்தப்பட்டது. நடுத்தர மற்றும் பீரிமியம் வகைகளை சேர்ந்த ‘ஆப்’ மது பாட்டிலுக்கு ரூ.40-ம், ‘புல்’ மது பாட்டிலுக்கு ரூ.80-ம் விலை உயர்த்தப்பட்டிருந்தது.

தரையில் அமர வைக்கப்பட்டனர்

அரியலூர் மாவட்டத்தில் பல கிராமங்களில் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் மாவட்டம் முழுவதும் உள்ள 53 கடைகளில் 24 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. மீதமுள்ள கடைகளின் முன்பு காலையிலேயே மதுப்பிரியர்கள் கூடி நின்று சமூக விலகலை கடைபிடிக்காமல், கடை எப்போது திறக்கும் என்று காத்திருந்தனர். அரியலூர் நகரில் உள்ள டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதும், டோக்கன் வழங்கப்பட்டது. இதையடுத்து மதுப்பிரியர்கள் கைகளிலும், பையிலும் மது பாட்டில்களை மகிழ்ச்சியுடன் வாங்கிச்சென்றனர்.

காலையில் முதியவர் களுக்கு மதுபாட்டில்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்ததால் கோட்டியால் கிராமத்தில் 200-க்கும் மேற்பட்டவர்கள் குவிந்ததால், அவர்கள் அனைவரும் தரையில் அமர வைக்கப்பட்டு படிப்படியாக மது வாங்க செல்ல அனுமதிக்கப்பட்டனர். வெயிலையும் பொருட்படுத்தாமல் நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து மதுப்பிரியர்கள் வாங்கிச்சென்றனர்.

ஆண்டிமடம், மீன்சுருட்டி, வி.கைகாட்டி

ஆண்டிமடம் பகுதியில் உள்ள மொத்தம் 4 டாஸ்மாக் கடைகளில் ஆண்டிமடத்தில் உள்ள 2 கடைகள் திறக்கப்படவில்லை. வரதராஜன்பேட்டை, அழகாபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள 2 டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டு விற்பனை நடைபெற்றது. சமூக இடைவெளியை கடைபிடிக்க 6 மீட்டர் அளவுக்கு இடைவெளிவிட்டு வட்டம் போடப்பட்டிருந்தது. காலை முதலே மதுப்பிரியர்கள் காத்திருந்தபோதும், போலீஸ் பாதுகாப்புடன் மது பாட்டில்கள் மதியம் 2 மணிக்கே வந்தன. அதற்கு முன்பாக ஆண்டிமடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர், மதுப்பிரியர்களுக்கு டோக்கன் வழங்கினார். பின்னர் வரிசையாக மதுப்பிரியர்கள் குடை பிடித்து, சமூக இடைவெளியை கடை பிடித்து முக கவசம் அணிந்து கொண்டு மதுபாட்டில்களை வாங்கிக்கொண்டு, மிகவும் மகிழ்ச்சியுடன் சென்றனர்.

மீன்சுருட்டி அருகே நெல்லித்தோப்பு கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடைக்கு காலை முதலே மதுப்பிரியர்கள் வரத்தொடங்கினர். ஆனால் மதுபானங்கள் வர காலதாமதம் ஏற்பட்டதால், மதுப்பிரியர்கள் ஏராளமானோர் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். மதியம் 2.30 மணியளவில் மதுபானங்கள் வந்ததும், விற்பனை தொடங்கி நடைபெற்றது. பாப்பாக்குடியில் உள்ள டாஸ்மாக் கடையில் மதுபானங்கள் இல்லாததால் நேற்று விற்பனை நிறுத்தப்பட்டது. வீரசோழபுரம் கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடை திறக்கப்படவில்லை. இதனால் மதுப்பிரியர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். வி.கைகாட்டி அருகே உள்ள தேளூர் கிராமத்தில் டாஸ்மாக் கடையில் மதுப்பிரியர்கள் நீண்ட வரிசையில் சமூக இடைவெளி விட்டு நின்று மது பாட்டில்களை வாங்கிச்சென்றனர்.

விக்கிரமங்கலம்

விக்கிரமங்கலம் அருகே புதுப்பாளையம் கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் நேற்று காலை 7 மணிக்கே மதுப்பிரியர்கள் குவிய தொடங்கினர். மது வாங்க வருபவர்கள் சமூக இடைவெளியை கடைபிடிப்பதற்காக மதுபானம் வாங்க வரும் ஒவ்வொருவரும் குடைபிடித்து வரவேண்டும் என்று விக்கிரமங்கலம் போலீசாரால் அறிவுறுத்தப்பட்டது. அதன்படி மதுப்பிரியர்கள் குடை பிடித்தபடி நீண்ட வரிசையில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு நின்று, கடும் வெயிலிலும் காத்திருந்து மதுபானங்களை வாங்கி சென்றனர்.

குன்னம் அருகே உள்ள பிலிமிசை கிராமத்தில் டாஸ்மாக் கடை ஊரின் மைய பகுதியில் அமைந்து உள்ளதாலும், பிலிமிசை அருகில் உள்ள இலுப்பைக்குடி கிராமத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பதாலும், ஆகையால் பிலிமிசை கிராம பெண்கள் எதிர்ப்பால் டாஸ்மாக் கடை திறக்கப்படவில்லை. கல்பாடி கிராமத்தில் பெண்கள் எதிர்ப்பால் டாஸ்மாக் கடை செயல்படாமல் மூடப்பட்டது.

அதிகம் வாசிக்கப்பட்டவை