ராமேசுவரத்தில் வடமாநில தொழிலாளர்கள் ஊர்வலம்; சொந்த ஊருக்கு அனுப்ப வலியுறுத்தல்


ராமேசுவரத்தில் வடமாநில தொழிலாளர்கள் ஊர்வலம்; சொந்த ஊருக்கு அனுப்ப வலியுறுத்தல்
x
தினத்தந்தி 9 May 2020 4:15 AM IST (Updated: 9 May 2020 12:52 AM IST)
t-max-icont-min-icon

சொந்த ஊர்களுக்கு அனுப்ப வலியுறுத்தி ராமேசுவரம் தாலுகா அலுவலகத்திற்கு ஊர்வலமாக வந்த வடமாநில தொழிலாளர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

ராமேசுவரம்,

பிரசித்தி பெற்ற பரிகார தலமாக ராமேசுவரம் இருப்பதால் அங்குள்ள தங்கும் விடுதி, ஓட்டல்களில் வடமாநில தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். தற்போது ஊரடங்கு அமலில் உள்ளதால் வெளிமாநில தொழிலாளர்கள் வேலை இழந்து அவதிப்பட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் தங்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கக்கோரி நேற்று வடமாநில தொழிலாளர்கள் பலர் கோவிலின் மேலவாசல் பகுதி யில் இருந்து திரண்டு தாலுகா அலுவலகத்தில் மனு கொடுக்க ஊர்வலமாக புறப்பட்டு சென்றனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் அங்கு விரைந்து வந்த போலீசார் ஊரடங்கு அமலில் உள்ளதால் கூட்டமாக சாலையில் செல்லக்கூடாது, 5 பேரை தவிர மற்ற அனைவரும் கலைந்து செல்லுமாறு தெரிவித்தனர். அதை தொடர்ந்து 5 பேரை தவிர மற்ற தொழிலாளர்கள் அனைவரும் அமைதியாக கலைந்து தாங்கள் தங்கியிருந்த இடங்களுக்கு சென்றனர். பின்னர் 5 பேர் மட்டும் தாலுகா அலுவலகம் வந்து தாசில்தார் அப்துல்ஜபாரிடம் மனு கொடுத்து விட்டு சென்றனர்.

இதுகுறித்து தாசில்தார் கூறியதாவது:-

ராமேசுவரம் கோவிலுக்கு வந்து சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் வடமாநில சுற்றுலா பயணிகள் மட்டும் 238 பேர் பல்வேறு இடங்களில் தங்க வைக்கப்பட்டு இருந்தனர். இதில் ஏற்கனவே 4 வாகனங்கள் மூலம் 60 பேர் ராமேசுவரத்தில் இருந்து ராஜஸ்தான், ஒடிசா, ஆந்திரா, பீகார் உள்ளிட்ட மாநிலங்களுக்கு அவர்களது சொந்த செலவில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 6 பஸ்கள் மூலமாக மீதம் உள்ள 178 பேரும் உத்தரபிரதேசம், மத்தியபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story