தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி கொடுப்பது அரசின் நோக்கம் - எதிர்க்கட்சி தலைவர்களிடம் எடியூரப்பா தகவல்


தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி கொடுப்பது அரசின் நோக்கம் - எதிர்க்கட்சி தலைவர்களிடம் எடியூரப்பா தகவல்
x
தினத்தந்தி 9 May 2020 12:29 AM GMT (Updated: 9 May 2020 12:29 AM GMT)

தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி கொடுப்பது அரசின் நோக்கம் என்று எதிர்க்கட்சி தலைவர்களிடம் எடியூரப்பா கூறினார்.

பெங்களூரு, 

கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பாவை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா தலைமையில் எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் பெங்களூருவில் நேற்று நேரில் சந்தித்து, அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அப்போது எடியூரப்பா பேசியதாவது:-

பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் உள்ளது. அந்த வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த அனைத்துவிதமான முன்எச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. மத்திய அரசின் வழிகாட்டுதல்படி கடந்த 4-ந் தேதி முதல் ஊரடங்கு தளர்த்தப்பட்டு பொருளாதார நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன.

பயிர் விளைச்சல் அறுவடை

விவசாய பணிகளுக்கு ஊரடங்கில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பது உறுதி செய்யப்பட்டது. கொரோனாவை தடுக்க மந்திரிகளை உள்ளடக்கி ஒரு செயல்படை அமைக்கப்பட்டது. விவசாயிகளுக்கு ஒரு போர் அலுவலகம் திறக்கப்பட்டது.

விவசாயத்துறை மந்திரி அனைத்து மாவட்டங்களிலும் சுற்றுப்பயணம் செய்து, விவசாயிகளின் பிரச்சினைகளை அறிந்துள்ளார். பயிர் விளைச்சல் அறுவடைக்கு தேவையான உபகரணங்கள் விவசாயிகளுக்கு வெளிமாநிலங்களில் இருந்து கொண்டுவந்து வழங்கப்பட்டுள்ளன. பருவமழை காலத்தில் விதைப்பு பணிகளுக்கு தேவையான விதைகள், உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

தொழிலாளர்களுக்கு வேலை

ஊரடங்கால் பாதிக்கப் பட்டுள்ள பல்வேறு துறை தொழிலாளர்களுக்கு உதவ ரூ.1,610 கோடியில் ஒரு சிறப்பு உதவி தொகுப்பு திட்டத்தை அறிவித்துள்ளேன். அதே போல் கஷ்டத்தில் சிக்கியுள்ள மற்ற தொழிலாளர்களுக்கும் உதவி வழங்கப்படும். பொருளாதார நடவடிக்கைகளை தொடங்கி அதன் மூலம் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்பது அரசின் நோக்கம் ஆகும்.

இவ்வாறு எடியூரப்பா பேசினார்.

Next Story