சேலத்தில் 2-வது நாளாக டாஸ்மாக் கடைகளில் மது வாங்க அலைமோதிய கூட்டம்


சேலத்தில் 2-வது நாளாக டாஸ்மாக் கடைகளில் மது வாங்க அலைமோதிய கூட்டம்
x
தினத்தந்தி 9 May 2020 5:06 AM GMT (Updated: 9 May 2020 5:06 AM GMT)

சேலத்தில் 2-வது நாளாக நேற்று டாஸ்மாக் கடைகளில் மது வாங்க கூட்டம் அலைமோதியது.

சேலம்,

சேலம் மாவட்டத்தில் மொத்தம் 216 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. ஆனால் 48 கடைகள் தடை செய்யப்பட்ட பகுதிகளில் செயல்பட்டு வருவதால் அந்த கடைகள் திறக்கப்படவில்லை. மீதமுள்ள 168 டாஸ்மாக் கடைகளும் நேற்று முன்தினம் காலை 10 மணிக்கு திறக்கப்பட்டன. அனைத்து கடைகள் முன்பும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்குமாறு வட்டம் போடப்பட்டிருந்தது.

மேலும் தடுப்பு கம்புகள் நீண்டதூரம் அமைக்கப்பட்டிருந்தன. இதையடுத்து போலீஸ் பாதுகாப்புடன் அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் மது விற்பனை தொடங்கியது. கடந்த 40 நாட்களுக்கும் மேலாக டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாமல் இருந்ததால் அனைத்து கடைகளிலும் மது வாங்குவதற்காக மது பிரியர்களின் கூட்டம் அலைமோதியது. சேலம் மாநகரில் 46 டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன.

ரூ.10 கோடிக்கு மது விற்பனை

சேலம் டவுன் ரெயில் நிலையம் எதிரில், முள்ளு வாடி கேட், அரசு ஆஸ்பத்திரியில் இருந்து பால் மார்க்கெட் செல்லும் வழி, சத்திரம், சிவதாபுரம் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் அளவுக்கு அதிகமாக கூட்டம் இருந்ததால் மது வாங்க வந்தவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மது வகைகளை வாங்கிச் சென்றனர். சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் ரூ.10 கோடியே 11 லட்சத்துக்கு மது விற்பனை நடைபெற்றதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் மாவட்டம் முழுவதும் நேற்று 2-வது நாளாக டாஸ்மாக் மதுக்கடைகளில் கூட்டம் அலைமோதியது. அனைத்து கடைகள் முன்பு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பின்னர் மதுப்பிரியர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து மதுபாட்டில்களை வாங்கி சென்றனர். காலை 10 மணிக்கு மதுக்கடைகள் திறக்கப்பட்டாலும் சில மதுப்பிரியர்கள் காலை 7 மணிக்கே கடைகள் முன்பு காத்திருந்தனர். இதைத்தொடர்ந்து போலீஸ் பாதுகாப்புடன் மது விற்பனை நடைபெற்றது. மேலும் மது பிரியர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கிறார்களா? என்றும், முக கவசம் அணிந்து இருக்கிறார்களா? என்றும் போலீசார் கண்காணித்தனர்.

விற்றுத்தீர்ந்தன

நேற்று முன்தினம் அனைத்து மதுக்கடைகளிலும் மது விற்பனை மும்முரமாக நடைபெற்றது. பெரும்பாலான கடைகளில் மது பாட்டில்கள் தீர்ந்து விட்டன. இதனால் நேற்று காலையில் 10 மணிக்கு முன்பாக டாஸ்மாக் குடோன்களில் இருந்து தேவைப்படும் கடைகளுக்கு லாரிகள் மூலம் மதுவகைகள் அனுப்பி வைக்கப்பட்டன. ஊரடங்கு உத்தரவு காரணமாக மீண்டும் மதுக்கடைகள் சில தினங்களில் மீண்டும் மூடப்பட்டுவிடும் என்ற அச்சத்தில் மதுப்பிரியர்கள் அதிகமான மது பாட்டில்களை வாங்கி சென்றனர். இந்த நிலையில் மதுக்கடைகளை மூட நேற்று மாலை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதனால் மதுப்பிரியர்கள் கவலை அடைந்துள்ளனர்.

Next Story