சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கக்கோரி ராமேசுவரம் தாலுகா அலுவலகத்தை வடமாநில தொழிலாளர்கள் முற்றுகை


சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கக்கோரி ராமேசுவரம் தாலுகா அலுவலகத்தை வடமாநில தொழிலாளர்கள் முற்றுகை
x
தினத்தந்தி 11 May 2020 7:44 AM GMT (Updated: 11 May 2020 7:44 AM GMT)

சொந்த ஊர்களுக்கு அனுப்ப வலியுறுத்தி ராமேசுவரம் தாலுகா அலுவலகத்தை வடமாநில தொழிலாளர்கள் நேற்று முற்றுகையிட்டனர்.

ராமேசுவரம்,

ராமேசுவரத்தில் உள்ள ஓட்டல், தங்கும் விடுதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வேலை பார்த்து வந்த பீகார், மத்தியபிரதேசம், உத்தரபிரதேசம், ஒடிசா, மராட்டியம் உள்ளிட்ட வடமாநில தொழிலாளர்கள் 500-க்கும் மேற்பட்டவர்கள் ஊரடங்கால் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர். மேலும், தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் கடந்த 1½ மாதத்திற்கு மேலாக தவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ராமேசுவரத்தில் பல்வேறு இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள வட மாநில தொழிலாளர்கள் 100-க்கும் மேற்பட்டோர் நேற்று திரண்டு வந்து தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் அவர்கள், தாசில்தார் அப்துல்ஜபாரிடம் ஊரடங்கால் வேலையில்லாமல் தவித்து வருவதால் தங்கள் அனைவரையும் சொந்த ஊர்களுக்கு விரைந்து அனுப்பி வைக்க ஏற்பாடு செய்து தருமாறு கோரிக்கை வைத்தனர். அவர்களிடம் தாசில்தார் அப்துல்ஜபார், இதுகுறித்து அரசின் அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டு உள்ளதாகவும் அரசு மூலம் ரெயிலோ அல்லது பஸ்களோ ஏற்பாடு செய்யப்பட்ட பின்பு அனைவரையும் அனுப்ப ஏற்பாடு செய்யப்படும். தங்களது சொந்த பணத்தில் செல்ல விரும்புபவர்களுக்கு வாகன வசதிகள் செய்து, அரசின் அனுமதி பெற்றுத்தரப்படும் என தெரிவித்தார். அதைத்தொடர்ந்து சிறிது நேரம் அங்கேயே காத்திருந்த அனைவரும் கலைந்து சென்றனர்.

இதற்கிடையே ஆந்திர மாநிலம் ரேணிகுண்டாவில் இருந்த கடந்த மார்ச் மாதம் 20-ந் தேதி ராமேசுவரத்தில் நடந்த திருமண நிகழ்ச்சிக்காக ராமேசுவரம் வந்து சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் 4 பேர் தங்கச்சிமடத்தில் ஒரு வீட்டில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். மேலும் அந்த 4 பேரும் தங்களது சொந்த ஊருக்கு செல்ல வாகன வசதிகள் செய்து அரசின் அனுமதியை பெற்றத்தரவேண்டும் எனவும், வாகனத்திற்கான வாடகை பணத்தை கொடுத்து விடுவதாகவும் கூறியதை தொடர்ந்து அந்த 4 பேரும் வாகனம் ஒன்றில் ஆந்திர மாநிலம் ரேணிகுண்டாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Next Story