குடும்பத்தகராறில் மனைவி தீக்குளித்து சாவு - கார் டிரைவர் தற்கொலை முயற்சி


குடும்பத்தகராறில் மனைவி தீக்குளித்து சாவு - கார் டிரைவர் தற்கொலை முயற்சி
x
தினத்தந்தி 14 May 2020 4:15 AM IST (Updated: 14 May 2020 3:18 AM IST)
t-max-icont-min-icon

குடும்பத்தகராறில் மனைவி தீக்குளித்து இறந்ததால் விரக்தியில் கார் டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்ய முயன்றார்.

பூந்தமல்லி, 

சென்னை மதுரவாயல், ஜானகி நகர், முதல் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் தாமஸ்(வயது 32). கார் டிரைவர். இவருடைய மனைவி ரஞ்சிதா என்ற எஸ்தர்(27). இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். நேற்று முன்தினம் மராட்டிய மாநிலம் செல்வதற்கு சவாரி ஒன்று வந்திருப்பதாகவும், ஊரடங்கு காலத்தில் இந்த சவாரிக்கு சென்று வந்தால் வருமானம் கிடைக்கும் என மனைவியிடம் கூறினார்.

ஆனால் அவர், தற்போது அங்கு செல்ல வேண்டாம். வீட்டில் இருந்து குழந்தைகளை பார்த்து கொள்ளுமாறு கூறினார். இதனால் கணவன்-மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் விரக்தி அடைந்த எஸ்தர், வீட்டில் இருந்த டீசலை தனது உடலில் ஊற்றி தீக்குளித்தார். 

மனைவியின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த தாமஸ், அவரது உடலில் எரிந்த தீயை அணைத்து கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை எஸ்தர் உயிரிழந்தார்.

மனைவி இறந்த செய்தி கேட்ட தாமஸ், துக்கம் தாங்க முடியாமல் வீட்டின் கதவை பூட்டிக்கொண்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொள்ள முயன்றார். அவரது உறவினர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று தூக்கில் தொங்கிய தாமசை மீட்டு போரூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவம் குறித்து மதுரவாயல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story