சேலம் மாவட்டத்தில் 186 மதுக்கடைகள் இன்று திறப்பு டோக்கன் முறையில் மது வழங்க நடவடிக்கை


சேலம் மாவட்டத்தில் 186 மதுக்கடைகள் இன்று திறப்பு டோக்கன் முறையில் மது வழங்க நடவடிக்கை
x
தினத்தந்தி 16 May 2020 4:13 AM GMT (Updated: 16 May 2020 4:13 AM GMT)

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு எதிரொலியாக சேலம் மாவட்டத்தில் 186 மதுக் கடைகள் இன்று திறக்கப்பட உள்ளது. மதுப்பிரியர்களுக்கு டோக்கன் முறையில் மது வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சேலம்,

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தாலும் மதுக்கடைகள் கடந்த 7 மற்றும் 8-ந் தேதி 2 நாட்கள் மட்டும் திறக்கப்பட்டன. அப்போது மதுப்பிரியர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்கவில்லை எனக்கூறி சென்னை ஐகோர்ட்டு மதுக்கடைகளை மூடுவதற்கு உத்தரவிட்டது. இதை எதிர்த்து தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை நேற்று விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, தமிழகத்தில் மதுக்கடைகளை திறக்கலாம் என உத்தரவிட்டது.

இதனைத்தொடர்ந்து சேலம் மாவட்டத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளை மீண்டும் திறக்க அனைத்துவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. சேலம் மாவட்டத்தை பொருத்தவரையில் மொத்தம் 216 டாஸ்மாக் மதுக்கடைகள் உள்ளன. ஆனால் கொரோனா பாதித்தவர்கள் வசித்த இடங்களில் தடைசெய்யப்பட்ட பகுதிகளாக இருப்பதால் 30 கடைகள் திறக்கப்படவில்லை. அதாவது சேலம் மாநகரில் 50 மதுக்கடைகளும், சேலம் புறநகர் பகுதியில் 136 கடைகளும் என மொத்தம் 186 மதுக்கடைகள் இன்று(சனிக்கிழமை) திறக்கப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளில் டாஸ்மாக் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

டோக்கன் முறை

ஏற்கனவே நடைமுறையில் இருந்தவாறு காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே மதுக்கடைகளில் மது விற்பனை செய்யப்படும் என்றும், கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக மது பிரியர்களுக்கு டோக்கன் முறையில் மது வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது குறித்து மாவட்ட டாஸ்மாக் மேலாளர் வேடியப்பன் கூறியதாவது:-

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை தொடர்ந்து சேலம் மாவட்டத்தில் மொத்தம் 186 மதுக்கடைகள் திறக்கப்பட உள்ளன. தடை செய்யப்பட்ட பகுதிகளில் 30 கடைகள் இருப்பதால் அந்த கடைகள் திறக்கப்படாது. மதுப்பிரியர்களுக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிறத்தில் டோக்கன் வழங்கப்படும். அவர்கள் முன்னதாகவே வந்து டோக்கனை பெற்றுக்கொள்ள வேண்டும். அதாவது ஞாயிற்றுக்கிழமை ஆரஞ்சு நிறம், திங்கட்கிழமை பச்சை நிறம், செவ்வாய்க் கிழமை சிவப்பு நிறம், புதன்கிழமை வெளிர் நீல நிறம், வியாழக்கிழமை ஊதா நிறம், வெள்ளிக்கிழமை காபி நிறம், சனிக்கிழமை அடர் நீல நிறம் என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிறத்தில் டோக்கன் வழங்கப்படும். இந்த டோக்கன் வைத்திருக்கும் நபர்களுக்கு மட்டுமே மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்படும்.

அறிவுரை

அதேசமயம் மது வாங்க வரும் மதுப்பிரியர்கள் முக கவசம் அணிந்து இருக்க வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். இதுபோன்ற உத்தரவுகளை மீறுபவர்களுக்கு மது வழங்கக் கூடாது என ஊழியர்களுக்கு அறிவுரை வழங்கி உள்ளோம். போலீஸ் பாதுகாப்புடன் மதுக்கடைகளை திறந்து விற்பனை செய்ய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story