இணையதளத்தில் பதிவு செய்த வெளிமாநில தொழிலாளர்கள் அனைவரையும் சொந்த ஊருக்கு அனுப்ப நடவடிக்கை - கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்
இணையதளத்தில் பதிவு செய்துள்ள வெளிமாநில தொழிலாளர்கள் அனைவரையும் சொந்த ஊருக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறினார். இதுகுறித்து அவர் நேற்று தூத்துக்குடியில் நிருபர்களிடம் கூறியதாவது:-
தூத்துக்குடி,
முதல்-அமைச்சர் உத்தரவுப்படி வெளிமாநில தொழிலாளர்கள் அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர். தூத்துக்குடி, நெல்லை, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் பணியாற்றி வரும் பீகார் மாநிலத்தை சேர்ந்த 1,389 பேர் சிறப்பு ரெயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர்.
குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் உடன்குடி அனல்மின்நிலையம் கட்டுமான பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள் உள்பட பல்வேறு தொழிற்சாலையில் பணியாற்றியவர்கள் சொந்த ஊருக்கு திரும்பி உள்ளனர். இவர்களுக்கு வழியில் ரெயில்வே மூலம் உணவு மற்றும் குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
4 ஆயிரத்து 700 பேர்
தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து சொந்த ஊருக்கு செல்ல இதுவரை 4 ஆயிரத்து 700 பேர் இணையதளம் மூலம் பதிவு செய்து உள்ளனர். மற்ற தொழிலாளர்களையும் அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மேலும் வெளிமாநிலம், வெளி மாவட்டங்களில் இருந்து தூத்துக்குடி மாவட்டத்துக்கு வருகிறவர்களை கண்காணிக்கும் பணிகள் சோதனை சாவடியில் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. வெளிமாவட்டத்தில் இருந்து வருபவர்களுக்கு கொரோனா அறிகுறிகள் இல்லாவிட்டால் வீட்டுக்கு அனுப்பி தனிமைப்படுத்தப்படுவார்கள். கொரோனா தொற்று நோய் உறுதி செய்யப்பட்டால் தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படும்.
இவ்வாறு கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறினார்.
பார்வையிட்டார்
முன்னதாக, சொந்த ஊருக்கு பீகார் மாநில தொழிலாளர்களை சிறப்பு ரெயிலில் அனுப்பும் பணியை கலெக்டர் சந்தீப் நந்தூரி பார்வையிட்டார். நிகழ்ச்சியில், கூடுதல் கலெக்டர் (வருவாய்) விஷ்ணுசந்திரன், தூத்துக்குடி உதவி கலெக்டர் சிம்ரான்ஜீத்சிங் கலோன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தனபதி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் அமுதா (பொது), பாலசுப்பிரமணியன் (வளர்ச்சி), சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் சங்கரநாராயணன், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) உமாசங்கர், ரெயில்வே முதுநிலை வர்த்தக மேலாளர் பிரசன்னா, எந்திரவியல் அதிகாரி விவேக் சர்மா, கோட்ட பாதுகாப்பு ஆணையர் அன்பரசு, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு குமார், மாவட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு பிரகாஷ், மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் மாரியப்பன், தாசில்தார்கள் செல்வகுமார் (தூத்துக்குடி), ரகு (ஓட்டப்பிடாரம்), மாநகராட்சி உதவி பொறியாளர் பிரின்ஸ் ராஜேந்திரன், உதவி ஆணையர் தனசிங் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story