தர்மபுரி மாவட்டத்தில் சோதனைச்சாவடிகளில் போலீஸ் ஐ.ஜி. ஆய்வு


தர்மபுரி மாவட்டத்தில் சோதனைச்சாவடிகளில் போலீஸ் ஐ.ஜி. ஆய்வு
x
தினத்தந்தி 18 May 2020 3:18 AM GMT (Updated: 18 May 2020 3:18 AM GMT)

தர்மபுரி மாவட்டம் தொப்பூர், காரிமங்கலம், காடுசெட்டிப்பட்டி ஆகிய சோதனைச்சாவடிகளில் போலீஸ் ஐ.ஜி. பெரியய்யா ஆய்வு மேற்கொண்டார்.

தர்மபுரி,

கொரோனா தொற்று பரவாமல் தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த தொற்று பரவாமல் தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையொட்டி மாவட்ட எல்லைகளில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு போலீசார் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வெளிமாவட்டங்களில் இருந்து தர்மபுரி மாவட்டத்திற்கு வரும் வாகனங்கள் மற்றும் பொது மக்களின் விவரங்களை கேட்டறிந்து அவர்களுக்கு ஏதேனும் காய்ச்சல் உள்ளதா? என்று சோதனை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் தொப்பூர், காரிமங்கலம், காடுசெட்டிப்பட்டி ஆகிய சோதனைச்சாவடிகளில் கோவை மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. பெரியய்யா ஆய்வு மேற்கொண்டார். அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசாருக்கு பிஸ்கட், குடிநீர், முககவசங்கள், கிருமி நாசினி ஆகியவற்றை வழங்கி அவர்களின் பணியை பாராட்டினார்.

தீவிர சோதனை

அப்போது ஐ.ஜி. பெரியய்யா கூறுகையில், தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க எடுக்கப்பட்டு வரும் போலீசாரின் நடவடிக்கைகள் பாராட்டத்தக்கது. வெளிமாவட்டங்களில் இருந்து வரும் பொதுமக்கள் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுவார்கள். பொதுமக்கள் தாங்களாகவே முன்வந்து காய்ச்சல் உள்ளதா? என்பதை தெரிவிக்க வேண்டும். வெளி மாவட்டங்களில் இருந்து ஊருக்குள் வரும் நபர்கள் குறித்து பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு உடனடியாக தகவல் தர வேண்டும் என்று கூறினார்.

இந்த ஆய்வின் போது சேலம் சரக போலீஸ் டி.ஜ.ஜி. பிரதீப்குமார், தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சுஜாதா, தர்மபுரி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜ்குமார் மற்றும் அந்தந்த பகுதி போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் உடனிருந்தனர்.


Next Story