கர்நாடகத்தில் ஊரடங்கு பெருமளவில் தளர்வு: ரெயில், பஸ்-ஆட்டோக்கள் இயக்க அனுமதி - முதல்-மந்திரி எடியூரப்பா அறிவிப்பு
கர்நாடகத்தில் இன்று(செவ்வாய்க் கிழமை) ரெயில், பஸ்-ஆட்டோக்கள் இயக்க அனுமதி வழங்குவதாக எடியூரப்பா நேற்று அறிவித்தார். இதன் மூலம் கர்நாடகத்தில் பெருமளவு ஊரடங்கு தளர்வு செய்யப்பட்டு உள்ளது.
பெங்களூரு,
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
இந்த ஊரடங்கு நேற்று 4-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் பெருமளவில் தளர்வு வழங்கப்பட்டுள்ளது. பெரும்பாலான சேவைளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளன. 4-வது கட்ட ஊரடங்கு வழிகாட்டுதலை மத்திய அரசு நேற்று முன்தினம் இரவு வெளியிட்டது.
அதுகுறித்து உடனே முடிவு எடுக்க முடியாத நிலையில், ஏற்கனவே அமலில் இருக்கும் ஊரடங்கை 2 நாட்களுக்கு கர்நாடக அரசு நீட்டித்து உத்தரவிட்டது. இந்த நிலையில் முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் பெங்களூரு விதான சவுதாவில் நேற்று நடைபெற்றது.
இதில் துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண், மருத்துவ கல்வி மந்திரி சுதாகர், வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக், போலீஸ் மந்திரி பசவராஜ் பொம்மை, கலால் துறை மந்திரி நாகேஷ், தலைமை செயலாளர் விஜயபாஸ்கர் உள்பட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் மத்திய அரசு வெளியிட்டுள்ள 4-வது கட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. காலை 11 மணிக்கு தொடங்கிய இந்த கூட்டம் மதியம் 1.45 மணிக்கு நிறைவடைந்தது. இந்த கூட்டத்திற்கு பிறகு எடியூரப்பா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
“கர்நாடகத்தில் 4-வது கட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன் அடிப்படையில் மந்திரிகள், மூத்த அதிகாரிகளுடன் நான் விரிவாக ஆலோசனை நடத்தினேன். கர்நாடகத்தில் ஊரடங்கு வருகிற 31-ந் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் கட்டுப்பாடுகளை மேலும் தீவிரப்படுத்துவோம். அங்கு விதிமுறைகளை மீறுவோர் மீது கிரிமினல் வழக்குகள் போடப்படும்.
பஸ்கள் போக்குவரத்து
மக்களின் நடமாட்டத்திற்கு அனுமதி அளிக்கும் நோக்கத்தில் கர்நாடகத்தில் அரசு பஸ்கள் போக்குவரத்து நாளை (இன்று) காலை முதல் தொடங்கும். தனியார் பஸ்களும் இயங்கலாம். ஆனால் கட்டுப்படுத்தப்பட்ட மற்றும் சிவப்பு மண்டலத்தில் பஸ்கள் இயங்க அனுமதி இல்லை. ஒரு பஸ்சில் அதிகபட்சமாக 30 பேர் மட்டுமே அனுமதிக்க வேண்டும். அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும். இது கட்டாயம். முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.
வெளிமாநிலங்களில் இருந்து வருகிறவர்களுக்கு படிப்படியாக அனுமதி வழங்கப்படும். அவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் வைக்கப்படுவார்கள். அவசியமான பணிகளை தவிர மற்ற நோக்கங்களுக்கு வருபவர்களுக்கு அனுமதி இல்லை. ஆட்டோ, வாடகை கார்கள் இயக்க அனுமதி வழங்கப்படுகிறது. ஆட்டோவில் டிரைவர் தவிர 2 பேரும், மேக்சி கேப் கார்களில் டிரைவர் தவிர 3 பேர்களும் பயணிக்கலாம்.
ரெயில்களை இயக்கலாம்
பெரிய வணிக வளாகங்கள், திரையரங்குகள், உடற்பயிற்சிகூடங்கள், உணவகங்களை திறக்க அனுமதி இல்லை. வழிபாட்டு தலங்களை திறக்கவும் அனுமதி கிடையாது. திருமண நிகழ்ச்சிகளை நடத்தலாம். ஆனால் அதில் 50 பேருக்கு மேல் பங்கேற்கக்கூடாது.
உணவகங்களில் பார்சல் வழங்கலாம். இவை தவிர அனைத்து கடைகளையும் திறக்க தடை இல்லை. ரெயில்களை கர்நாடகத்திற்குள் இயக்கலாம். சலூன்கள், பல் மருத்துவ மையங்களை திறக்கலாம். ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும். அன்றைய தினம் பஸ், ஆட்டோ உள்பட எந்த சேவைக்கும் அனுமதி கிடையாது.
இழப்பை அரசே ஏற்கும்
பூங்காக்களில் காலை 7 மணி முதல் காலை 9 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. சிவப்பு மண்டலங்கள் குறித்து சுகாதாரத்துறையினர் முடிவு செய்வார்கள். கொரோனா பாதிப்பு உள்ள பகுதிகள் மட்டும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக வரையறுக்கப்படும். மக்கள் எந்த அளவுக்கு ஒத்துழைப்பு வழங்குகிறார்கள் என்பதை பார்த்த பிறகு, 31-ந் தேதிக்கு பிறகு அடுத்தகட்டமாக முடிவு செய்வோம். பஸ் கட்டணத்தை உயர்த்தும் திட்டம் இல்லை. போக்குவரத்து கழகங்களுக்கு ஏற்படும் இழப்பை அரசே ஏற்கும்.
கர்நாடகத்தில் இந்த சேவைககளுக்கு காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை மட்டுமே அனுமதி. இரவு 7 மணி முதல் காலை 7 மணி வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும். உணவகங்களை திறந்து, உணவுகளை பார்சல் மூலம் வழங்க வேண்டும். எக்காரணம் கொண்டும் உணவகங்களை மூடக்கூடாது. தெருவோர வியாபாரிகள் தங்களின் வியாபாரத்தை செய்யலாம். இன்று(நேற்று) எடுக்கப்பட்ட முடிவுகள் நாளை(அதாவது இன்று) முதலே அமலுக்கு வருகின்றன. வீட்டு தனிமைக்கு முக்கியத்துவம் அளிப்பது என்று தீர்மானித்துள்ளோம்.”
இவ்வாறு எடியூரப்பா கூறினார்.
56 நாட்களுக்கு பிறகு...
பெங்களூருவில் பஸ் நிலையங்களில் பயணிகள் தனிமனித இடைவெளியை பின்பற்றுவதை உறுதி செய்ய, போக்குவரத்து ஊழியர்கள் இடைவெளியுடன் பெயிண்ட் மூலம் பாக்ஸ்களை வரைந்துள்ளனர். பயணிகள் அந்த பாக்ஸ்களில் வரிசையாக நின்று பஸ்சில் ஏற வேண்டும்.
கிருமிநாசினி திரவத்தையும் பஸ்களில் பயன்படுத்த வசதி செய்யப்பட்டுள்ளது. 56 நாட்களுக்கு பிறகு பஸ்கள் சாலையில் இயங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பெங்களூருவில் இருந்து அனைத்து மாவட்டங்களுக்கும் பஸ்கள் இயக்கப்படுகின்றன.
Related Tags :
Next Story