கீரிப்பாறையில் இருந்து சொந்த ஊருக்கு நடந்தே செல்ல முயன்ற வடமாநில தொழிலாளர்கள்
கீரிப்பாறையில் தனியார் எஸ்டேட்டில் வேலை செய்த வடமாநில தொழிலாளர்கள், சொந்த ஊருக்கு நடந்தே செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
அழகியபாண்டியபுரம்,
கீரிப்பாறையில் தனியார் எஸ்டேட்டில் வேலை செய்த வடமாநில தொழிலாளர்கள், சொந்த ஊருக்கு நடந்தே செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
வடமாநில தொழிலாளர்கள்
கீரிப்பாறை பகுதியில் தனியாருக்கு சொந்தமான ஏராளமான எஸ்டேட்டுகள் உள்ளன. இந்த எஸ்டேட்டுகளில் கிராம்பு, ஏலக்காய், வாழை உள்ளிட்டவை பயிர் செய்யப்படுகின்றன.
இங்கு விளைவிக்கப்படும் கிராம்புகளை பறிப்பதற்காக வெளிமாநிலங்களில் இருந்து ஜனவரி மாதம் தொழிலாளர்கள் வருவார்கள். அவ்வாறு வரும் தொழிலாளர்கள் எஸ்டேட்டில் தங்கி இருந்து கிராம்பு பறிக்கும் பணியில் ஈடுபடுவார்கள். பின்னர், சீசன் முடிந்து மார்ச் மாதம் தங்களது சொந்த ஊருக்கு செல்வது வழக்கம்.
ஊர் திரும்ப முடியாமல் அவதி
இந்த ஆண்டும் கிராம்பு பறிக்கும் பணிக்காக மத்தியபிரதேசத்தில் 93 தொழிலாளர்கள் வந்தனர். அவர்கள் மாறாமலை பகுதியில் உள்ள எஸ்டேட்டுகளில் தங்கி இருந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.
சீசன் காலம் முடிந்து கடந்த மார்ச் மாதம் தங்களது சொந்த ஊருக்கு செல்ல இருந்தனர். அப்போது, நாடு முழுவதும் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டது. இதனால், தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் பெரும் அவதிக்குள்ளாகி எஸ்டேட்டிலேயே தங்கி இருந்தனர்.
நடந்தே செல்ல முடிவு
இந்தநிலையில் 93 வடமாநில தொழிலாளர்களும் சொந்த ஊருக்கு நடந்தே செல்ல முடிவு செய்தனர். அதன்படி நேற்று காலை மாறாமலையில் இருந்து புறப்பட்ட அவர்கள் வாழையத்துவயல் பகுதிக்கு வந்தனர். தகவல் அறிந்த கீரிப்பாறை போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். மேலும், இதுபற்றி தகவல் அறிந்த பத்மநாபபுரம் சப்-கலெக்டர் சரண்யா அரி, தக்கலை துணை போலீஸ் சூப்பிரண்டு ராமச்சந்திரன், திருவட்டார் தாசில்தார் அஜிதா, குலசேகரம் இன்ஸ்பெக்டர் ராஜசுந்தர், தடிக்காரன்கோணம் ஊராட்சி தலைவர் பிராங்கிளின் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, அவர்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்வதாக உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து 93 தொழிலாளர்களையும் வாழையத்துவயல் பகுதியில் உள்ள ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளியில் தங்க வைத்தனர்.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story