விவசாயிகள் கோடை உழவை தவற விடக்கூடாது வேளாண் இணை இயக்குனர் தகவல்


விவசாயிகள் கோடை உழவை தவற விடக்கூடாது   வேளாண் இணை இயக்குனர் தகவல்
x
தினத்தந்தி 21 May 2020 8:43 AM IST (Updated: 21 May 2020 8:43 AM IST)
t-max-icont-min-icon

பயிர்கள் செழித்து மகசூல் தர உதவும் கோடை உழவை விவசாயிகள் தவற விடமால் மேற்கொள்ள வேண்டும் என்று வேளாண் அதிகாரி தெரிவித்துள்ளார்.

மதுரை, 

மதுரை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் விவேகானந்தன் ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சாகுபடி நிலத்தை கோடைகாலத்தில் உழவு செய்வது சிறந்த முறையாகும். இதனால் நிலத்தில் உள்ள குறிப்பிட்ட வகை பூச்சிகளை அழிக்க முடியும். குறிப்பாக, மண்ணில் மறைக்கப்பட்டிருக்கும் பூச்சியின் முட்டைகள், இளம் புழுக்கள், கூட்டுப்புழுக்கள் போன்றவை அழிக்கப்படுகின்றன. நிலத்தின் நீர்பிடிப்புத் தன்மை மேம்படுத்தப்படுகிறது.

மேலும், கோடை உழவு செய்வதால் அடிமண் மேல்மண்ணாகவும், மேல் மண் அடி மண்ணாகவும் நன்றாக கலப்பை கொண்டு ஆழமாகவும், சரிவுக்கு குறுக்காகவும் உழவு செய்யப்படுகிறது. தண்ணீர் கிடைக்கும்போது வயலில் இருந்து தண்ணீர் வீணாகாமல் நிலத்தில் இறங்க வழிவகை செய்யப்படுகிறது. மண்ணிற்கு நல்ல காற்றோட்டம் கிடைக்கிறது. இது மண்ணில் நுண்ணுயிர்கள் வளர்வதற்கு ஏதுவாகும்.

மண் இறுக்கம்

கோடை உழவினால் மண்ணின் இறுக்கம் தளர்ந்து மண் பொலபொலவென்று இருக்கும். இதனால், பயிர் சாகுபடி செய்யும் போது வேர் நன்றாக ஓடும். அடி மண் மேலே வரும்போது மண்ணில் உள்ள கூட்டுப்புழுக்களை பறவைகள் கொத்தி தின்று விடும். களைகள் நன்கு காய்ந்து விடும். கோரை மற்றும் அருகுகள் இருந்தால் அவற்றின் கிழங்குகளை குத்தூசி கொண்டு வெட்டி எடுத்து விடலாம்.

கோடையில் பெருமழை பெய்தால் மண் நன்றாக மழை நீரை உறிஞ்சி உள் வாங்கி ஈரத்தை தக்க வைத்துக் கொள்ளும். பூச்சி மற்றும் நோயில் இருந்து பயிரை பாதுகாக்கவும் இந்த கோடை மழை உதவியாக இருக்கும். எனவே, விவசாயிகள் கோடை உழவை தவற விடாமல் செய்ய வேண்டும்.

பொட்டாஷ் உரம்

மதுரை மாவட்டத்தில் விவசாய பணிகளுக்கு தேவையான உரங்கள் தனியார் உரக்கடைகளிலும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளிலும் இருப்பில் வைக்கப்பட்டுள்ளது. யூரியா, டி.ஏ.பி., பொட்டாஷ், காம்ப்ளக்ஸ் இருப்பில் உள்ளன. இந்த உரங்களை அரசு நிர்ணயித்துள்ள விலைக்கே விவசாயிகளுக்கு விற்பனை செய்ய வேண்டும். மேலும், உரக்கட்டுப்பாட்டு சட்டம் 1985-ன் படி அனுமதி பெறாத பொருட்கள் உரக்கடைகளில் இருப்பு வைத்து விற்கக்கூடாது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், தற்போது ஐ.பி.எல். பொட்டாஷ் உரம் மூடை ஒன்றுக்கு ரூ.950 என்ற விலைக்கு விற்கப்படுகிறது. இனி ரூ.875 என்ற விலையில் விற்பனை செய்யப்படும். இந்த விலை குறைப்பு விவசாயிகளுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story