கோவை அரசு ஆஸ்பத்திரியில் கைகளை சுத்தம் செய்ய கிருமிநாசினி எந்திரம்
கோவை அரசு ஆஸ்பத்திரியில், கைகளை சுத்தம் செய்ய கிருமி நாசினி எந்திரம் வைக்கப்பட்டுள்ளது.
கோவை,
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தனித்திருக்க வேண்டும், கைகளில் கிருமிநாசினி திரவம் (சானிடைசர்), சோப்பு உள்ளிட்டவை மூலம் கைகளை அடிக்கடி கழுவ வேண்டும் என்று அரசு அறிவுறுத்தி வருகிறது. அத்துடன் கொரோனாவை ஒழிக்கும் வகையில் அரசு ஆஸ்பத்திரி, அரசு அலுவலகங்கள், போலீஸ் நிலையங்கள், தொழில் நிறுவனங்களில் வாசலிலேயே கிருமிநாசினி திரவம் தெளிக்கும் பணி நடந்து வருகிறது.
மேலும் அனைத்து இடங்களிலும் பொதுமக்கள் கைகளை கழுவும்விதமாக கிருமிநாசினி திரவம் வைக்கப்பட்டு உள்ளது.
கிருமி நாசினி எந்திரம்
ஒருவர் பயன்படுத்திய திரவபாட்டிலை மற்றொருவர் தொடும்போது கொரோனா தொற்று கைகள் மூலம் பரவும் என்பதால் இதை தவிர்ப்பதற்காக கால் மதிப்பான் சானிடைசர் திரவ எந்திரம் தயாரிக்கப்பட்டு உள்ளது. அவை கோவை அரசு ஆஸ்பத்திரி, இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி, மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம், சில போலீஸ் நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் வைக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து அரசு ஆஸ்பத்திரி டீன் (பொறுப்பு) காளிதாஸ் கூறும்போது, இந்த கால் மிதிப்பான் சானிடைசர் எந்திரம் செயல்பட பேட்டரியோ அல்லது மின்சாரமோ தேவையில்லை. இரும்பு மற்றும் உருக்கால் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த எந்திரத்தில் கால் மிதியடி உள்ளது. இந்த மிதியடியை காலால் அழுத்தினால் சானிடைசர் திரவம் கைகளில் ஊற்றிவிடும். கோவை அரசு ஆஸ்பத்திரியில் ஏராளமான பொதுமக்கள் வருவதால் இந்த கால்மிதிப்பான் சானிடைசர் திரவ எந்திரம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது என்றார்.
Related Tags :
Next Story