காவல்கிணற்றில் இருந்து சொந்த ஊருக்கு தண்டவாளம் வழியாக நடந்தே சென்ற வடமாநில தொழிலாளர்கள்


காவல்கிணற்றில் இருந்து சொந்த ஊருக்கு தண்டவாளம் வழியாக நடந்தே சென்ற வடமாநில தொழிலாளர்கள்
x
தினத்தந்தி 22 May 2020 3:41 AM GMT (Updated: 22 May 2020 3:41 AM GMT)

காவல்கிணற்றில் இருந்து சொந்த ஊருக்கு தண்டவாளம் வழியாக நடந்தே சென்ற வடமாநில தொழிலாளர்களை வள்ளியூர் போலீசார் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர்.

வள்ளியூர், 

காவல்கிணற்றில் இருந்து சொந்த ஊருக்கு தண்டவாளம் வழியாக நடந்தே சென்ற வடமாநில தொழிலாளர்களை வள்ளியூர் போலீசார் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர்.

வடமாநில தொழிலாளர்கள்

தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் பல்வேறு மாநிலங்களில் இருந்து தமிழகத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் வேலை இன்றி வருமானம் இல்லாமல் உணவுக்கும் வழியின்றி தவித்து வருகின்றனர். மேலும் போக்குவரத்து வசதியின்றி தங்கள் சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் பரிதவிக்கின்றனர்.

இதனால் வெளிமாநில தொழிலாளர்கள் தங்கள் உடைமைகளுடன் சொந்த ஊருக்கு நடந்தே செல்கிறார்கள். அவர்களை அரசு அதிகாரிகள் தடுத்து நிறுத்தி, முறைப்படி அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கிறார்கள்.

தடுத்து நிறுத்தம்

நெல்லை மாவட்டம் காவல்கிணறு இஸ்ரோ மையத்தில் தனியார் ஒப்பந்த நிறுவனத்தில் ஜார்கண்ட், ஒடிசா உள்ளிட்ட பல்வேறு வடமாநிலத்தினர் கூலித்தொழிலாளிகளாக வேலை பார்த்து வருகின்றனர். தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக, அங்கு வேலையின்றி தவித்து வந்த வடமாநில தொழிலாளிகள் 52 பேர் நேற்று காலையில் காவல்கிணற்றில் இருந்து ரெயில் தண்டவாளம் வழியாக தங்களது உடைமைகளுடன் சொந்த ஊருக்கு நடந்தே சென்றனர்.

அவர்கள் வள்ளியூருக்கு வடக்குப்பகுதியில் சென்றபோது வள்ளியூர் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி வேனில் ஏற்றி அந்த பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்துக்கு அழைத்து சென்று தங்க வைத்தனர். பின்னர் அவர்களுக்கு ‘தெர்மல் ஸ்கேனர்‘ மூலம் உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டது. அரசு அனுமதி பெற்று சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பதாகவும், அதுவரை வேலை பார்க்கும் இடத்தில் தங்கி கொள்ளுமாறும் அவர்களுக்கு போலீசார் அறிவுரை கூறினர். பின்னர் அவர்கள், பணி செய்து வந்த ஒப்பந்த நிறுவன ஊழியர்களை வரவழைத்து அவர்களுடன் மீண்டும் காவல்கிணற்றுக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story