வேலை நேரத்தை குறைக்ககோரி கோவையில் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
வேலை நேரத்தை குறைக்ககோரி கோவையில் அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கோவை,
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசை கண்டித்து நாடு முழுவதும் நேற்று அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது அதன்படி கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஏ.ஐ.டி.யு.சி. சங்க மாநில செயலாளரும். முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ஆறுமுகம் தலைமை தாங்கி பேசிய தாவது:-
ஊரடங்கை பயன்படுத்தி மத்திய அரசு தொழிலாளர்களின் சட்டபடியான வேலை நேரத்தை 8 மணி நேரம் என்பதை 12 மணிநேரமாக உயர்த்தி உள்ளது. தொழிலாளர் நல சட்டங்கள் பலவற்றை மத்திய அரசு திருத்தயுள்ளது. இதைக் கண்டித்து நாடு தழுவிய அளவில் நேற்று அனைத்து மத்திய தொழிற் சங்கங்கள் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டது.
8 மணி நேரமாக குறைக்க வேண்டும்
சட்டப்படி 8 மணி நேரம் என்ற தொழிலாளர்களின் உரிமையை குஜராத், உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், அரியானா, ராஜஸ்தான், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் 12 மணி நேரமாக மாற்றப்பட்டு உள்ளது. இதை கைவிட்டு வேலை நேரத்தை 8 மணி நேரமாக குறைக்க வேண்டும்.புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் அனைவரும் தங்களது சொந்த ஊர் போவதற்கு வாகனம் உணவு, தண்ணீர் வசதிகள் செய்து கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில், வி.ஆர்.பாலசுந்தரம் (ஐ.என்.டி.யு.சி.), டி.எஸ்.ராஜாமணி(எச்எம்.எஸ்.), எஸ். கிருஷ்ணமூர்த்தி (சி.ஐ.டி.யு.), மு.தியாகராஜன் (எம்.எல்.எப்.), ப.மணி (எல்.பி.எப்.), மற்றும் சி.தங்கவேல், எஸ்.ஆறுமுகம், ரத்தினவேல், மதியழகன், லூயிஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தொழிலாளர் நல அலுவலகம்
இதேபோல கோவை ராமநாதபுரம் தொழிலாளர் நல அலுவலர் அலுவலகம் முன்பு அமைப்பு சாரத் தொழிலாளர் மற்றும் கட்டிட கட்டுமானத் தொழிலாளர் சங்கங்களின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏ.ஐ.டி.யூ.சி. சங்கத்தின் சார்பில் மாநில துணை பொது செயலாளர் என்.செல்வராஜ், எல்.பி.எப். சங்கத்தின் சார்பில் வெ.கிருஷ்ணசாமி, எச்.எம்.எஸ். ஜி.மனோகரன், ஐ.என்.டி.யு.சி. பி.சிரஞ்சீவி கண்ணன், சி.ஐ.டி.யூ. மனோகரன், ஏ.ஐ.டி.யு.சி. ஆர்.பாலகிருஷ்ணான் உள்பட பலர் கலந்து கொண்டனர். அமைப்பு சாரத் தொழிலாளர்கள் அனைவருக்கும் மாதம் ரூ.7 ஆயிரத்து 500 உதவித் தொகை வழங்கவேண்டும், நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பென்சன் தொகையை உடனே வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.
மேலும் சிவானந்தா காலனி, காந்தி நகர், அண்ணாநகர், ஆறுமுக்கு, அழகப்பா ரோடு ஆகிய இடங்களிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.
Related Tags :
Next Story