வேலூர் மாவட்டத்தில் அரசு பஸ் டிரைவர் உள்பட 2 பேருக்கு கொரோனா
சென்னையில் பணிபுரிந்த வேலூர் மாவட்டத்தை சேர்ந்த அரசு பஸ் டிரைவர் உள்பட 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
வேலூர்,
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அருகேயுள்ள வேப்பங்கனேரி பகுதியை சேர்ந்தவர் 45 வயது ஆண். இவர் சென்னையில் அரசு போக்குவரத்துக்கழகத்தில் டிரைவராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக அவர் சொந்த ஊர் திரும்பினார். டிரைவருக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் சளிமாதிரி சேகரிக்கப்பட்டன. வீட்டில் தனிமையில் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டு அவர் அனுப்பி வைக்கப்பட்டார். இந்த நிலையில் சளிமாதிரி பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
அதைத்தொடர்ந்து டிரைவர் சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் உள்ள சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டார். மேலும் அவரின் குடும்பத்தினர், உறவினர்கள் 12 பேர் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக வேலூர் பென்ட்லேன்ட் அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டனர். மேலும் அப்பகுதி முழுவதும் தனிமைப்படுத்தப்பட்டது. டிரைவரின் வீடு மற்றும் அப்பகுதியில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.
உத்தரபிரதேசத்தில் பணிபுரிந்த 12 பேர் சில நாட்களுக்கு முன்பு வேலூர் திரும்பினர். அவர்களுக்கு சளிமாதிரி சேகரிக்கப்பட்டு, கொணவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர். இந்த நிலையில் அவர்களில் 25 வயது வாலிபர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அதையடுத்து அவர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். மேலும் அவர் தங்கியிருந்த இடத்தில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. மீதமுள்ள 11 பேருக்கும் மீண்டும் சளிமாதிரிகள் சேகரிக்கப்பட்டன.
வேலூர் மாவட்டத்தில் கொரோனாவினால் 38 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 31 பேர் குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர். ஒருவர் உயிரிழந்து விட்டார். மீதமுள்ள 6 பேருக்கும் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Related Tags :
Next Story