சேலம் மாவட்டத்தில் ஒருவருக்கு கூட தற்போது கொரோனா தொற்று இல்லை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தகவல்


சேலம் மாவட்டத்தில் ஒருவருக்கு கூட தற்போது கொரோனா தொற்று இல்லை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தகவல்
x
தினத்தந்தி 24 May 2020 2:21 AM GMT (Updated: 24 May 2020 2:21 AM GMT)

சேலம் மாவட்டத்தில் ஒருவருக்கு கூட தற்போது கொரோனா தொற்று இல்லை என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சேலம், 

சேலம் மாவட்டத்தில் ஒருவருக்கு கூட தற்போது கொரோனா தொற்று இல்லை என்றும், வெளி மாநிலங்களில் இருந்து வந்தவர்களில் சிலர் மட்டுமே பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அதிகாரிகளுடன் ஆய்வு

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் சென்னையில் இருந்து சேலத்திற்கு வந்தார். பின்னர் அவர் நேற்று காலை சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா வைரஸ் நோய் தொற்று தடுப்பு பணிகள், குடிமராமத்து பணிகள் மற்றும் குடிநீர் திட்டப்பணிகள் குறித்து அனைத்துத்துறை அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அவர், மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா வைரஸ் தடுப்பு பணிகள், கொரோனா நிவாரணம் வழங்குதல், கோடை காலத்தில் பொதுமக்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் குடிநீர் கிடைக்க மேற்கொள்ள வேண்டிய பணிகள், பருவமழைக்கு முன்னதாக செய்ய வேண்டிய குடிமராமத்து பணிகள் உள்ளிட்டவை குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனைகள் வழங்கினார்.

பேட்டி

இதனைத்தொடர்ந்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

சேலம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கு என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்த அளவுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது என இந்த கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது. கோடை காலம் என்பதால் ஆங்காங்கே குடிநீர் பிரச்சினை ஏற்படாமல் பார்த்து கொள்ள வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல் அத்தியாவசிய பொருட்கள் மக்களுக்கு தங்குதடையின்றி அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி தமிழக அரசு அறிவித்த நலத்திட்ட உதவிகள் பொது வினியோகத்திட்டத்தின் கீழ் மக்களுக்கு தங்கு தடையில்லாமல் வழங்கப்பட்டிருக்கிறது.

கொரோனா இல்லாத மாவட்டம்

மேலும், அரசு அறிவித்த வழிமுறைகளை மாவட்ட நிர்வாகம் சரியான முறையில் செயல்படுத்தியதன் விளைவாக சேலம் மாவட்டம் இன்றைக்கு கொரோனா இல்லாத மாவட்டமாக பார்க்கப்படுகிறது. சேலம் மாவட்டத்தை பொறுத்தவரையில் கொரோனா வைரசால் 35 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். அதாவது, மொத்தம் 14,003 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில், 35 பேருக்கு மட்டும் கொரோனா பாதிப்பு இருந்தது தெரியவந்ததை தொடர்ந்து அவர்கள் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு பின் தற்போது அனைவரும் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.

வெளி மாநிலங்களில் இருந்து சேலத்திற்கு வந்த 2,539 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில், அதில், கொரோனா வைரசால் 14 பேர் மட்டும் பாதிக்கப்பட்டிருந்தனர். அவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேபோல், வெளி மாவட்டங்களில் இருந்து சேலத்திற்கு வந்த 1,890 பேருக்கு பரிசோதனை செய்ததில், 7 பேருக்கு நோய் அறிகுறி பாதிப்பு இருந்தது. அதில், ஒருவர் குணமடைந்துவிட்டார். மீதியுள்ள 6 பேர் மட்டும் தற்போது ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வெளி மாநிலத்தில் இருந்து

சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை மாவட்டத்தில் இருக்கிற ஒருவருக்கு கூட தற்போது கொரோனா நோய் தொற்று இல்லை. நோய் தொற்று ஏற்பட்ட 35 பேரும் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். அதேசமயம் வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து சேலத்திற்கு வந்தவர்களுக்கு மட்டுமே சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

வெளி மாநிலத்திலிருந்து கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் வந்து கொண்டே இருக்கிறார்கள். மராட்டியத்தில் அதிகமாக இந்நோய் கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்தவர்கள் வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் வசித்து வருகிறார்கள். அவர்கள் தற்போது தமிழகத்திற்கு வரவேண்டும் என்று கூறுகிறார்கள். வெளி மாநிலத்திலிருந்து அழைத்து வருகின்றபோது, அதில் பலர் அந்த நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். தினந்தோறும் சுகாதாரத்துறை மூலமாக வெளிமாநிலத்திலிருந்து வந்தவர்களில் எவ்வளவு பேருக்கு கொரோனா தொற்று நோய் ஏற்பட்டிருக்கிறது என்ற விவரம் தெரியவருகிறது.

கட்டுப்படுத்த முடியாது

இதுவரை 719 பேருக்கு கொரோனா நோய் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். சேலத்தில், வெளி மாநிலம் மற்றும் வெளிமாவட்டங்களிலிருந்து வந்தவர்கள் தான் சிகிச்சை பெற்று வருகிறார்கள். சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் யாரும் இல்லை. அதனால் தான் எச்சரிக்கையோடு இருக்கிறோம். எல்லாவற்றையும் திறந்து விட்டால், எல்லா மாநிலத்திலிருந்தும் இங்கே வந்தார்கள் என்றால், இந்த நோய் சமூக பரவலாகிவிடும். கட்டுப்படுத்த முடியாது. சில கட்டுப்பாடுகளை விதித்து, இந்த நோய் பரவலை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்று தான் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

இந்த ஆய்வுக்கூட்டத்தில், மாவட்ட கலெக்டர் ராமன், மாவட்ட வருவாய் அலுவலர் திவாகர், மாநகராட்சி ஆணையாளர் சதீஷ், மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் நிர்மல்சன், சேலம் அரசு ஆஸ்பத்திரி டீன் பாலாஜிநாதன், கோவை சரக போலீஸ் ஐ.ஜி.பெரியய்யா, மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார், சரக டி.ஐ.ஜி.பிரதீப்குமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா கனிக்கர், நீர்வளத்துறை கண்காணிப்பு பொறியாளர் ஜெயகோபால், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மேற்பார்வை பொறியாளர் சந்திரசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story