ஒருவரை மட்டுமே ஏற்றிச் செல்ல உத்தரவு: 50 சதவீத ஆட்டோக்கள் ஓடவில்லை


ஒருவரை மட்டுமே ஏற்றிச் செல்ல உத்தரவு:  50 சதவீத ஆட்டோக்கள் ஓடவில்லை
x
தினத்தந்தி 25 May 2020 5:02 AM IST (Updated: 25 May 2020 5:02 AM IST)
t-max-icont-min-icon

ஒருவரை மட்டுமே ஏற்றிச் செல்ல வேண்டும் என்று உத்தரவிடப்பட்டதால் கோவையில் 50 சதவீத ஆட்டோக்கள் ஓடவில்லை.

கோவை,

கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் பொது போக்குவரத்துகளான பஸ், டாக்சி மற்றும் ஆட்டோக்கள் எதுவும் கடந்த 50 நாட்களுக்கு மேலாக இயக்கப்பட வில்லை. இந்த நிலையில் ஊரடங்கில் சில தளர்வுகளை தமிழக அரசு அறிவித்தது. அதன்படி கடந்த 23-ந் தேதி முதல் சென்னையை தவிர தமிழகம் முழுவதும் ஆட்டோக்களை இயக்க தமிழக அரசு அனுமதி அளித்தது. அதன்பேரில் நேற்றுமுன்தினம் முதல் கோவையில் ஆட்டோக்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால் கொரோனா பரவுவதை தடுக்க ஆட்டோக்களில் ஒரு பயணியை தான் ஏற்றிச் செல்ல வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. இதனால் கோவை மாநகரில் 100-க்கும் மேற்பட்ட ஆட்டோ நிறுத்தங்கள் உள்ளன. இங்கிருந்து 13 ஆயிரம் ஆட்டோக்களில் இயக்கப்பட்டு வந்தன. ஆனால் தற்போது 50 சதவீதத்துக்கும் அதிகமான ஆட்டோக்கள் ஓட வில்லை.

இது குறித்து கோவை மாவட்ட அனைத்து ஆட்டோ தொழிற்சங்க கூட்டமைப்பு தலைவர் சுகுமாரன் மற்றும் டிரைவர்கள் கூறியதாவது:-

2 பேரை அனுமதிக்க வேண்டும்

கொரோனா ஊரடங்கு முடியும் வரை குறைந்தது 2 பயணிகளை ஆட்டோக்களில் ஏற்றிச் செல்ல அனுமதி வேண்டும். கடந்த 2 மாதங்க ளாக ஆட்டோக்கள் ஓடாததால் வாழ்வாதாரத்தை இழந்து விட்டோம். தற்போது ஆட்டோவுக்கு பேட்டரி, ஆயில், சர்வீஸ், இன்சூரன்ஸ் உள்ளிட்ட செலவுகளை செய்ய பணம் இல்லை. இதற்கிடையே குடும்ப செலவுகளை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் ஆட்டோ டிரைவர்கள் தவித்து வருகின்றனர்.ஒருவரை மட்டுமே ஏற்றிச் செல்ல வேண்டும் என்று உத்தரவிட்டு உள்ளதால் பலரும் ஆட்டோக்களை இயக்காமல் உள்ளனர். ஆட்டோவில் ஒருவரை மட்டும் சவாரிக்கு ஏற்றி சென்றால் ஆட்டோ டிரைவர்களுக்கு நஷ்டம் தான் ஏற்படும். ஊரடங்கு காலத்தில் ஆட்டோக்களுக்கான எப்.சி., பெர்மிட், இன்சூரன்ஸ் காலாவதியாகி விட்டது. அதை புதுப்பிக்க 6 மாதம் அவகாசம் வழங்க வேண்டும். அதுவரை ஆட்டோக்களுக்கு ஆர்.டி.ஓ. அபராதம் விதிப்பது போன்ற நடவடிக்கைகளை தவிர்க்க வேண்டும். ஆட்டோ டிரைவர்களுக்கு ஆந்திர மாநில அரசு ரூ.20 ஆயிரம் நிவாரணத் தொகை வழங்கியதுபோல தமிழக அரசும் நிவாரணத்தொகை வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story