மராட்டியத்தில் கொரோனா பரவல் குறித்து ராகுல்காந்தி கருத்து: பொறுப்பில் இருந்து காங்கிரஸ் தப்பி ஓட பார்க்கிறது - தேவேந்திர பட்னாவிஸ் குற்றச்சாட்டு
மராட்டியத்தில் கொரோனா பரவல் குறித்து ராகுல்காந்தி கருத்து கூறியதற்கு, பொறுப்பில் இருந்து காங்கிரஸ் தப்பி ஓட பார்க்கிறது என்று எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் குற்றம்சாட்டினார்.
மும்பை,
மராட்டியம் தான் நாட்டிலேயே கொரோனாவால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட மாநிலம் ஆகும். இங்கு ஆட்சியில் உள்ள சிவசேனா தலைமையிலான கூட்டணி அரசு கொரோனா பரவலை கட்டுப்படுத்த தவறிவிட்டதாக எதிர்க்கட்சியான பாரதீய ஜனதா குற்றம்சாட்டி வருகிறது.
மராட்டிய கூட்டணி அரசில் காங்கிரஸ் அங்கம் வகிக்கும் நிலையில், நேற்று ஆன்லைன் மூலம் பேட்டியளித்த காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, அங்கு கொரோனாவை கட்டுப்படுத்த முக்கிய முடிவு எடுக்கும் இடத்தில் காங்கிரஸ் இல்லை என்று கூறினார்.
இதுகுறித்து பாரதீய ஜனதாவை சேர்ந்த சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் கூறியதாவது:-
ராகுல்காந்தி கூறியிருக்கும் கருத்துகள் சிவசேனா மற்றும் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே கொரோனாவை கட்டுப்படுத்துவதில் தோல்வி அடைந்ததையே சுட்டி காட்டுகிறது. மேலும் கூட்டணி அரசில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் இந்த தோல்விக்கான பொறுப்பில் இருந்து தப்பி ஓட பார்க்கிறது. அரசியல் விளையாட்டிற்கான நேரம் இதுவல்ல. மராட்டியத்தில் நாங்கள் ஆட்சி அமைப்பதற்காக அவசரப்படவில்லை. பாரதீய ஜனதாவின் கவனம் கொரோனாவை எதிர்த்து போராடுவதில் தான் உள்ளது. இந்த அரசாங்கம் கூட்டணி கட்சிகள் இடையே உள்ள முரண்பாடுகளாலும், ஒருங்கிணைப்பு இல்லாமையாலும் வீழ்ச்சி அடையும்.
ஆனால் அரசை கவிழ்க்க எதிர்க்கட்சி முயற்சிப்பதாக கூறுவது கொரோனாவை கட்டுப்படுத்துவதில் அரசாங்கத்தின் தோல்வியில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்ப வேண்டுமென்றே செய்யப்படுகிறது. தொற்றுநோயை கட்டுப்படுத்த பயனுள்ள நடவடிக்கைகளை எடுக்க எதிர்க்கட்சி தொடர்ந்து அரசுக்கு அழுத்தம் கொடுக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
சுப்பிரமணிய சுவாமி, நாராயண் ரானே ஆகியோர் மராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என கோரியுள்ளது பற்றி கேட்டதற்கு அதற்கும், பாரதீய ஜனதாவுக்கும் சம்பந்தம் இல்லை என்றார்.
இதற்கிடையே ராகுல்காந்தியின் கருத்து பற்றி மாநில காங்கிரஸ் தலைவர் பாலசாகேப் தோரட் கூறுகையில், ராகுல்காந்தி எதையும் தவறாக கூறவில்லை. நாங்கள் மாநில அரசாங்கத்தின் ஒரு அங்கமாக இருக்கிறோம். ஆனால் முக்கிய முடிவெடுக்கும் இடத்தில் அல்ல. முடிவுகளை எடுப்பதில் இறுதி அதிகாரம் முதல்-மந்திரியிடம் தான் உள்ளது, என்றார்.
Related Tags :
Next Story