ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் பூ வியாபாரிகள் - அரசு உதவித்தொகை வழங்க கோரிக்கை


ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் பூ வியாபாரிகள் - அரசு உதவித்தொகை வழங்க கோரிக்கை
x
தினத்தந்தி 28 May 2020 3:30 AM IST (Updated: 27 May 2020 10:18 PM IST)
t-max-icont-min-icon

ஊரடங்கு காரணமாக பூ வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு அரசு உதவித்தொகை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பத்தூர்,

திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர், ஆலங்காயம், வாணியம்பாடி, ஆம்பூர் தாலுகாக்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மல்லிகை, முல்லை, கனகாம்பரம், சாமந்தி, சம்பங்கி உள்ளிட்ட பூக்கள் அதிகளவில் பயிரிடப்பட்டு வருகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் பூக்கள் திருப்பத்தூர் பூ மார்க்கெட் மட்டுமின்றி பெங்களூருவுக்கும், மாவட்டத்தின் பல்வேறு இடங்களுக்கும் கொண்டு சென்று விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் கோவில் திருவிழாக்கள் கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். அப்போது பூக்கள் அதிக அளவில் விற்பனையாகும். இதனால் நல்ல வருமானம் கிடைக்கும். தற்போது கொரோனாவை கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு காரணமாக மாவட்டத்தில் நடைபெற இருந்த கோவில் திருவிழாக்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுவிட்டன. திருமணங்கள் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளுக்கு சில உறவினர்களுடன் மிகவும் எளிமையாக நடந்து வருகிறது.

இதனால் பூக்களின் பயன்பாடு வெகுவாக குறைந்துள்ளது. துக்க நிகழ்ச்சியில் மாலை அணிவிப்பது வழக்கம். ஆனால் தற்போது 10 பேர் மட்டுமே துக்கநிகழ்ச்சியில் அனுமதிக்கப்படுவதால் யாருமே மாலை வாங்க வருவதில்லை. இதனால் விவசாயிகள் பூக்களை பறிக்காமல் தோட்டத்திலேயே விட்டுள்ளனர்.

இந்த நிலையில் விவசாய தோட்டங்களுக்கும், மார்க்கெட்டுகளுக்கும் சென்று பூக்களை மொத்தமாக வாங்கி வந்து சாலையோரம் அமர்ந்து, பூக்களை கட்டி பெண்கள் பலர் வியாபாரம் செய்து வருகிறார்கள். தற்போது அவர்களது வியாபாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. திருப்பத்தூரை பொறுத்தவரை புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம் உள்பட பல்வேறு இடங்களில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் சாலையோரம் பூ வியாபாரம் செய்து வருகின்றனர். இவர்களுக்கு பூக்கள் வாங்கிய செலவு போக நாள் ஒன்றுக்கு ரூ.300 முதல் ரூ.500 வரை வருமானம் கிடைக்கும். ஆனால் தற்போது ஊரடங்கு காரணமாக சாலையோர கடைகளுக்கு அனுமதி இல்லாததால் பூ விற்கும் பெண்கள் வருமானம் இன்றி வாழ்வாதாரம் இழந்து நிற்கின்றனர்.

இது குறித்து பூ விற்கும் பெண்கள் சிலர் கூறியதாவது:-

நாங்கள் விவசாயிகளின் தோட்டங்களுக்கு நேரடியாக சென்று பூக்களை மொத்தமாக வாங்கி வந்து, அதனை கட்டி விற்பனை செய்து வருகிறோம். திருப்பத்தூர் நகரில் 100-க்கும் மேற்பட்டோர் பூ வியாபாரம் செய்து வந்த நிலையில் தற்போது போலீசாரின் நெருக்கடியால் 20 பேர் மட்டுமே வியாபாரம் செய்து வருகிறோம். அதுவும் போலீசாருக்கு பயந்து கொண்டே பூ விற்பனை செய்து வருகிறோம். இந்த ஊரடங்கு எங்களது வாழ்க்கையை புரட்டிப்போட்டுள்ளது. இப்போதெல்லாம் ரூ.100 வருமானம் கிடைப்பது பெரிய விஷயமாக உள்ளது. கோவில்கள், சுப நிகழ்ச்சிகளுக்கு செல்லும் பெண்கள் சாலையோரம் இருக்கும் எங்களிடம் பூக்களை வாங்கி செல்வார்கள். ஆனால் தற்போது கோவில்கள் பூட்டிக்கிடக்கின்றன. இதனால் எங்களது வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

நாங்கள் வருமானமின்றி குடும்பத்துடன் மிகவும் சிரமப்படுகிறோம். சில சமயங்களில் ஒரு வேளை சாப்பாட்டுக்கு கூட வழியின்றி இருக்கிறோம். அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியத்தில் நாங்கள் பதிவு செய்யவில்லை. இதனால் அரசு சார்பில் எந்த ஒரு உதவியும் கிடைக்காததால் எங்களுடைய வாழ்வாதாரமே கேள்விக்குறியாக உள்ளது. எனவே எங்களுடைய வாழ்வாதாரத்தை காப்பாற்ற அரசு உதவி செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story