வளர்ச்சி பணிகளுக்கு ரூ.4 கோடி ஒதுக்கீடு ;எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி. தகவல்


வளர்ச்சி பணிகளுக்கு ரூ.4 கோடி ஒதுக்கீடு ;எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி. தகவல்
x
தினத்தந்தி 28 May 2020 9:20 AM IST (Updated: 28 May 2020 9:20 AM IST)
t-max-icont-min-icon

சேலம் நாடாளுமன்ற தொகுதியில் வளர்ச்சி பணிகளுக்கு ரூ.4¾ கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி. தெரிவித்துள்ளார்.

சேலம்,

சேலம் நாடாளுமன்ற தொகுதி எம்.பி. எஸ்.ஆர்.பார்த்திபன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பொதுமக்களிடம் இருந்து பட்டா, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, சாலை வசதி, குடிநீர் வசதி போன்றவை கேட்டு 11,250 மனுக்கள் பெறப்பட்டு ஒன்றிய, நகரம் வாரியாக பிரிக்கப்பட்டு கலெக்டரிடம் வழங்கப்பட்டது. அதில், 45 சதவீத மனுக்களுக்கு உரிய நிவாரணம் பெற்று கொடுக்கப்பட்டுள்ளது.

கடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடர் 80 நாட்கள் நடைபெற்றது. இதில் 72 நாட்கள் கலந்து கொண்டு 64 கேள்விகள் கேட்டுள்ளேன். மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை நிதி மானிய கோரிக்கை விவாதத்தில் பேசியுள்ளேன்.

மேட்டூர் அணையில் இருந்து வெளியேறும் உபரிநீரை நீரேற்று பாசனத்திட்டத்தின் மூலம் ஏரிகளுக்கு திருப்பி விடும் திட்டத்தை பற்றி பேசினேன். நான், மேட்டூர் எம்.எல்.ஏ.வாக இருந்தபோது இந்த திட்டத்தை நிறைவேற்றக்கோரி பல்வேறு போராட்டங்களை நடத்தி தமிழக அரசின் கவனத்தை ஈர்த்தேன். தற்போது இந்த திட்டப்பணிகள் ரூ.565 கோடியில் தொடங்கப்பட உள்ளது. இரும்பாலையை தனியார் மயமாக்குவதை தடுத்திட வேண்டி நாடாளுமன்றத்தில் பேசி உள்ளேன். சேலம் இரும்பாலைக்கு பாத்தியப்பட்ட பயன்படுத்தப்படாத ஆயிரக் கணக்கான ஏக்கரில் புதிய தொழில் தொடங்க மத்திய அரசு முன்வர வேண்டும். வெள்ளி கொலுசு தொழிலுக்கு ஜி.எஸ்.டி.யில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளேன்.

மத்திய மந்திரிகள் தர்மேந்திர பிரதான், கஜேந்திரசிங் செகாவத், ஹர்பீப்சிங் பூரி, பியூஸ் கோயல், கிரேன்ரிஜீ ஆகியோரை சந்தித்து இரும்பாலை, மேட்டூர் உபரிநீர், காமலாபுரம் விமான நிலையம் விரிவாக்கம், புதிய வழித்தடத்தில் ரெயில்கள் இயக்கம், காந்தி விளையாட்டு மைதானத்தை சர்வதேச அளவில் விரிவாக்கம் செய்வதற்கும் கோரிக்கை மனு கொடுத்துள்ளேன்.

சேலம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட சேலம் வடக்கு, தெற்கு, மேற்கு, ஓமலூர், வீரபாண்டி, எடப்பாடி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் சோலார் விளக்குகள், கழிப்பறை, சைக்கிள் நிறுத்தும் நிலையம், மின்மோட்டாருடன் கூடிய ஆழ்துளை கிணறுகள், கழிவுநீர் கால்வாய், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள், 8 அரசு பள்ளிகளுக்கு ஸ்மார்ட் வகுப்பறைகள் உள்ளிட்ட வளர்ச்சி பணிகளுக்கு ரூ.4 கோடியே 80 லட்சம் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ஒதுக்கியுள்ளேன்.

கொரோனா நோய் தொற்று காலத்தில் ஏழை- எளிய மக்களுக்கு என் சொந்த செலவில் 48 ஆயிரத்து 450 குடும்பங்களுக்கு ரூ.64 லட்சம் மதிப்பில் உணவு பொருட்கள், கையுறை, கிருமி நாசினி மற்றும் முக கவசம் வழங்கியுள்ளேன். ஓராண்டையொட்டி தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் மாவட்ட செயலாளர்கள், கட்சியினர் என அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Next Story