இ-பாஸ் கட்டாயம் என்று அறிவித்ததால் மதுரையில் இருந்து வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலில் 396 பேர் மட்டுமே பயணம் 800 இருக்கைகள் காலியாக இருந்தன
மதுரையில் இருந்து நேற்று விழுப்புரம் புறப்பட்ட வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலில் முன்பதிவு செய்த பயணிகளுக்கு இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டதால், 396 பயணிகள் மட்டுமே பயணம் செய்தனர். 800 இருக்கைகள் காலியாக இருந்தன.
மதுரை,
கொரோனா ஊரடங்கு காரணமாக 72 நாட்களாக ரெயில் போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்தது. மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்களுக்காக சிறப்பு பார்சல் ரெயில் மற்றும் வடமாநில தொழிலாளர்களுக்கான ஷரமிக் சிறப்பு ரெயில் ஆகியவை மட்டும் இயக்கப்பட்டு வந்தன. இந்த நிலையில் நேற்று பயணிகளுக்கான சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை தொடங்கியது.
இதில், மதுரை கோட்ட ரெயில்வேக்கு உட்பட்ட பகுதியில் மதுரையில் இருந்து விழுப்புரம் வரை சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டது. அதாவது, மதுரையில் இருந்து தினமும் காலை 7 மணிக்கு சென்னை புறப்பட்டு செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் ரெயில்தான் தற்போது விழுப்புரம் வரை இயக்கப்படுகிறது. இந்த ரெயிலுக்கு சுமார் 500-க்கும் மேற்பட்ட பயணிகள் முன்பதிவு செய்திருந்தனர். மேலும் இந்த ரெயில், திருச்சி மற்றும் அரியலூர் ஆகிய ரெயில் நிலையங்களில் மட்டும் நின்று செல்லும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
இ-பாஸ் கட்டாயம்
நேற்று முன்தினம் இரவில், முன்பதிவு செய்த பயணிகள் அனைவரும் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கான அனுமதிச்சீட்டான இ-பாஸ் பெற வேண்டும் என்று திடீரென்று அறிவிக்கப்பட்டது.
இது குறித்த எஸ்.எம்.எஸ். தகவல் முன்பதிவு செய்த பயணிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து, பெரும்பாலான பயணிகள் உடனடியாக சம்பந்தப்பட்ட இணையதள முகவரியில் ஆன்லைனில் இ-பாஸ் விண்ணப்பம் செய்தனர். சில பயணிகள் இரவு நேரத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் திணறினர்.
396 பேர் பயணம்
இதனால், நேற்று காலை புறப்பட்ட வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலில் 396 பேர் மட்டுமே மதுரையில் இருந்து பயணம் செய்தனர். சுமார் 800 இருக்கைகள் காலியாக இருந்தன.
ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது, இ-பாஸ் கட்டாயம் என்ற தகவல் பயணிகளுக்கு தெரிவிக்கப்படவில்லை. ஆனால், இரவு நேரத்தில் திடீரென்று இ-பாஸ் கட்டாயம் என்றதால், நிறைய பயணிகள் பயணத்தை ரத்து செய்ய வேண்டியதாகி விட்டது.
மேலும், இ-பாஸ் விண்ணப்பத்தில், 10 பயணிகள் வரை செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அடையாள சான்றில், ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, டிரைவிங் லைசென்சு, பான்கார்டு, பாஸ்போர்ட் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை பதிவேற்றம் செய்ய வேண்டும். பி.என்.ஆர். எண் கொடுப்பதுடன், டிக்கெட் நகலையும் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
விதிகளை திருத்த வலியுறுத்தல்
ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு காகித பயன்பாட்டை குறைக்க வேண்டும் என்பதற்காக, எஸ்.எம்.எஸ். தகவல் மட்டும் அனுப்பி வைக்கப்படும். ஆனால், இ-பாஸ் விண்ணப்பத்தில் டிக்கெட்டை பதிவேற்றம் செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது. இதனால், ஆன்லைனில் ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்தாலும், டிக்கெட் பிரிண்ட் எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
எனவே, இந்த விதிகளை திருத்த வேண்டும் என்று பயணிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே, மதுரையில் இருந்து சென்ற பயணிகளுக்கு மதுரை ரெயில் நிலையத்தில் தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டது. டிக்கெட் வைத்திருந்தவர்கள் மட்டும் ரெயில் நிலையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். ரெயில் பெட்டிகளில் பயணிகள் ஏறுவதற்கு முன் சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட்டு, வரிசையாக ஏறிச்சென்றனர். முன்னதாக ரெயில் பெட்டிகள் முழுவதும் கிருமிநாசினி திரவம் கொண்டு சுத்தம் செய்யப்பட்டது.
Related Tags :
Next Story