ஈரோடு வழியாக ரெயில்கள் ஓடத்தொடங்கின


ஈரோடு வழியாக ரெயில்கள் ஓடத்தொடங்கின
x
தினத்தந்தி 2 Jun 2020 6:27 AM GMT (Updated: 2 Jun 2020 6:27 AM GMT)

ஈரோடு வழியாக ரெயில்கள் ஓடத்தொடங்கியதையொட்டி பயணிகள் பரிசோதனைக்கு பின்னர் அனுமதிக்கப்பட்டனர்.

ஈரோடு,

கொரோனா ஊரடங்கு வருகிற 30-ந் தேதி வரை அமலில் உள்ளது. ஆனால் பொதுமக்களுக்கு சில விதிமுறை தளர்வுகள் அளிக்கப்பட்டு உள்ளன. அதன்படி நேற்று முதல் தமிழகத்தில் பஸ் போக்குவரத்து மற்றும் ரெயில் போக்குவரத்து தொடங்கியது. ஈரோடு ரெயில் நிலையம் வழியாக செல்லும் இன்டர் சிட்டி, சதாப்தி ரெயில்கள் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த ரெயில் பயணத்துக்கு பலரும் முன்பதிவு செய்து இருந்தனர்.

நேற்று காலை கோவையில் இருந்து புறப்பட்ட இன்டர் சிட்டி ரெயில் காலை 7.45 மணிக்கு ஈரோடு ரெயில் நிலையத்துக்கு வந்தது. ஜோலார் பேட்டை வரை சென்ற இந்த ரெயிலில் ஈரோட்டில் இருந்து 60 பேர் பயணம் செய்தனர். முன்னதாக காலை 6.45 மணி முதல் பயணிகள் ரெயில் நிலையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். வந்த அனைவரின் முன்பதிவு டிக்கெட்டுகள் பரிசோதனை செய்யப்பட்டன. அதுபோல் ரெயில் நிலைய நுழைவு வாயிலிலேயே காய்ச்சல் பரிசோதனைக்கு பின்னரே பயணிகள் அனைவரும் ரெயில் நிலையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

இதுபோல் கோவையில் இருந்து மயிலாடுதுறை சென்ற சதாப்தி ரெயில் காலை 8.30 மணிக்கு வந்தது. இதில் ஈரோட்டில் இருந்து 100 பேர் சென்றனர். இந்த ரெயிலிலும் முன்பதிவு டிக்கெட் வைத்து இருந்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். இரவு 8 மணிக்கு இன்டர் சிட்டி ரெயில், இரவு 8.20 மணிக்கு சதாப்தி ரெயில் ஆகியவை கோவைக்கு திரும்பி சென்றன. இந்த ரெயில்களில் ஈரோட்டில் இருந்து யாரும் செல்லவில்லை. சில பயணிகள் மட்டும் வந்து இறங்கினார்கள். அவர்களுக்கும் ரெயில் நிலையத்திலேயே காய்ச்சல் பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

ஈரோடு ரெயில் நிலையத்தில் தற்போது இந்த 2 ரெயில்களுக்கு மட்டும் முன்பதிவு டிக்கெட் வழங்கும் கவுண்ட்டர்கள் இயங்குகின்றன. இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் ஊரடங்கு நேரத்தில் ரத்து செய்யப்பட்ட ரெயில்களுக்கு முன்பதிவு செய்த பயணிகளுக்கு முன்பதிவு ரத்துக்கட்டணம் திரும்ப வழங்க தனியாக கவுண்ட்டர்கள் செயல்படும் என்று ரெயில்வே நிர்வாகம் அறிவித்து உள்ளது.

Next Story