நெல்லை, தூத்துக்குடி கலெக்டர் அலுவலகங்களில் மேளதாளத்துடன் மனு வழங்கிய நாட்டுப்புற கலைஞர்கள்


நெல்லை, தூத்துக்குடி கலெக்டர் அலுவலகங்களில் மேளதாளத்துடன் மனு வழங்கிய நாட்டுப்புற கலைஞர்கள்
x
தினத்தந்தி 3 Jun 2020 10:15 PM GMT (Updated: 3 Jun 2020 7:32 PM GMT)

சமூக இடைவெளியை கடைபிடித்து விழாக்களை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி, நெல்லை, தூத்துக்குடி கலெக்டர் அலுவலகங்களில் நாட்டுப்புற கலைஞர்கள் மேளதாளத்துடன் வந்து கோரிக்கை மனு வழங்கினர்.

தூத்துக்குடி,

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் உள்ளதால், பல்வேறு தரப்பினரும் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

ஊரடங்கு காரணமாக கோவில் விழாக்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. திருமண விழா, காதணி விழா, புதுமனை புகு விழா போன்ற விழாக்கள் எளிமையாக நடத்தப்படுகிறது.

இதனால் நாட்டுப்புற இசை கலைஞர்கள் வேலைவாய்ப்பின்றி வறுமையில் வாடுகின்றனர். இந்த நிலையில் நாட்டுப்புற இசை கலை பெருமன்ற தலைவர் பிரபாகரன், செயலாளர் சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோர் தலைமையில், நாட்டுப்புற கலைஞர்கள் நேற்று நெல்லை கலெக்டர் அலுவலகம் முன்பு அணிவகுத்து நின்று சிறிதுநேரம் மேளதாளம் வாசித்தனர். பின்னர் அவர்கள், கலெக்டர் அலுவலகத்தில் மனு வழங்கினர்.

அதில், கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்து பாதிக்கப்பட்ட நாட்டுப்புற இசை கலைஞர்களுக்கு ரூ.2 ஆயிரம் நிவாரண உதவி வழங்கிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம். எனினும் 60 வயது முதிர்ந்த 4 ஆயிரத்திற்கு மேற்பட்ட நாட்டுப்புற கலைஞர்களுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படவில்லை. எனவே, அவர்களுக்கும் இந்த உதவித்தொகையை உடனே வழங்க வேண்டும்.

நாட்டுப்புற கலைஞர்களின் குடும்பத்திற்கு பேரிடர் ஈட்டுத்தொகையாக ரூ.40 ஆயிரம் வழங்க வேண்டும். கொரோனா விழிப்புணர்வு மற்றும் அரசு விளம்பர பிரசாரத்திற்கு அந்ததந்த மாவட்டத்தில் உள்ள நாட்டுப்புற கலைஞர்களை பயன்படுத்த வேண்டும். அவர்களுக்கு தலா ரூ.1,000 ஊதியம் வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதேபோன்று கிராமிய வில்லிசை கலைஞர்கள் முன்னேற்ற சங்க கீழப்பாவூர் தலைவர் ஜெகநாதன், நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் மனு வழங்கினார்.

அதில், நலிவடைந்த வில்லிசை கலைஞர்களுக்கு ரூ.5 ஆயிரம் நிவாரணத்தொகை வழங்க வேண்டும். நலவாரியத்தின் மூலம் வழங்கிய உதவித்தொகையை, 60 வயதை கடந்தவர்களுக்கும் வழங்க வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடித்து விழாக்களை நடத்தவும், வில்லிசை நிகழ்ச்சி நடத்தவும் அனுமதிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதே கோரிக்கைகளை வலியுறுத்தி, தூத்துக்குடி மாவட்ட நாட்டுப்புற இசைக்கலை பெருமன்றத்தினரும், தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் முன்பு மேளதாளம் வாசித்தவாறு சென்று கோரிக்கை மனு வழங்கினர்.

Next Story