நம்பியூர் அருகே 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான பெருங்கற்கால சின்னம் கண்டுபிடிப்பு


நம்பியூர் அருகே 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான பெருங்கற்கால சின்னம் கண்டுபிடிப்பு
x
தினத்தந்தி 5 Jun 2020 6:14 AM GMT (Updated: 5 Jun 2020 6:14 AM GMT)

நம்பியூர் அருகே 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான பெருங்கற்கால சின்னம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நம்பியூர்,

பெருங்கற்கால மனிதர்களின் இனக்குழுத் தலைவர்கள் மற்றும் இறந்த முன்னோருக்கான நினைவுச் சின்னங்கள் பெரிய கற்களைக் கொண்டு பழங்காலத்தில் எழுப்பப்பட்டன. கொங்கு மண்டலத்தில் கொடுமணல், குமரிக்கல் பாளையம், பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை மற்றும் பல பகுதிகளில் பெருங்கற்கால சின்னங்களான குத்துக்கல், கல்திட்டை, கல்பதுக்கை, கல்வட்டங்கள் ஆகியவை கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.

உலகளாவிய பார்வையில் இந்த சின்னங்களின் ஆரம்பநிலை என்பது ஒழுங்கற்ற வடிவிலான பெருங்கற்களைக் கொண்டு நினைவுச் சின்னங்களை அமைத்த முறை ஆகும். இதுபோன்ற ஒரு பெருங்கற்கால சின்னமானது ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே வேம்மாண்டம்பாளையத்தை அடுத்து உள்ள மங்கரசுவளையபாளையத்தில் காணப்படுகிறது. இங்கு வரலாற்று ஆய்வாளர் முடியரசு தலைமையில் சேவூர் தனிப்பிரிவுக் காவலர் வெள்ளியங்கிரி மற்றும் சமூக ஆர்வலர் ஆனந்தன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

ஆய்வு மேற்கொண்ட பகுதி சூரப்பநாயக்கன் குட்டை என்றும், பாறைக்குழி என்றும் கூறப்படுகிறது. இந்த குன்றின் முன்பு பல ஆண்டுகளாக பாறைகளை வெட்டி எடுத்திருப்பதால் பழைய பெருங்கற்கால சின்னங்கள் அழிந்திருக்க வாய்ப்பு உள்ளது. மங்கரச வளையபாளையம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் இதைத் ‘தூக்கிவெச்சான் பாறை‘ என்று கூறுகின்றனர்.

இதுகுறித்து தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வாளர் முடியரசு கூறியதாவது:-

மங்கரசுவளையபாளையத்தில் உள்ள பெருங்கற்காலச்சின்னத்தின் கீழ்ப்பகுதியில் 3 கற்கள் அருகருகே நிலையாக நிறுத்தப்பட்டுள்ளன. இந்த கற்கள் சுமார் 2 அடி உயரம் கொண்டவை ஆகும். இதன் மேற்பரப்பில் சுமார் 2 டன் எடையுள்ள பிரம்மாண்டமான பெருங்கல் நிலையாக நிறுத்தப்பட்டுள்ளது. இப்பெருங்கல்லின் மேற்புரம் வட்டவடிவில் உள்ளது.

மேற்பரப்பு 11 அடி விட்டமும் கீழ்ப்பகுதி 5.5 அடி விட்டமும் உடையதாகும். மேலே விரிந்தும், கீழே குறுகியும் உள்ள தலைகீழான கூம்பு வடிவில் பெருங்கல் காட்சி அளிக்கின்றது. சிறு குன்றின் பாறைப் பகுதியில் நிறுத்தப்பட்ட இந்த பிரம்மாண்டமான பெருங்கற்காலச் சின்னம் பார்ப்பதற்கு வியப்பை ஏற்படுத்துவதாக உள்ளது. பெருங்கற்கால முன்னோர்கள் பலரின் கூட்டு உழைப்பால் மட்டுமே இது சாத்தியம் எனப் புலனாகிறது.

தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய பகுதிகளில் மட்டுமே இதுபோன்ற ஒழுங்கற்ற வடிவ அதிக எடையுள்ள பிரம்மாண்டமான சின்னங்கள் உள்ள நிலையில் கொங்கு மண்டலத்தில் கண்டறியப்பட்ட இந்த மிகப்பழமையான சின்னம் கொங்கு பகுதி வரலாற்றில் திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது. இது தொப்பிக்கல் வகை போலத் தெரிந்தாலும், உண்மையில் இந்த சின்னமானது டால்மன் வகை எனப்படும் கல்திட்டைகளின் ஆரம்ப வகை என்றும், 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது எனவும் தொல்லியல் அறிஞர் தி.சுப்பிரமணியம் கருத்து தெரிவித்திருக்கிறார்.

குறிஞ்சி நில மனிதர்கள் அதாவது மலைகள் மற்றும் குன்றுகளில் வசித்த பெருங்கற்கால மனிதர்கள் பாறைகளின் மேல் ஏற்படுத்திய பெருங்கற்கால சின்னங்களின் முன்னோடியாக இந்த பெருங்கல் சின்னத்தைக் கருதலாம் என்றும், கொங்கு மண்டலத்தில் காணப்பட்டுள்ள அரிய வகைச் சின்னம் இதுவே ஆகும் என்று தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வறிஞர் பூங்குன்றன் கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும் மாவட்ட தொல்லியல் அதிகாரி நந்தகுமாரிடம் இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொங்கு மண்டலத்தில் மிகப்பழமையான பெருங்கற்கால சின்னம் கண்டறியப்பட்டதால் இப்பகுதி வரலாற்று ஆர்வலர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இவ்வாறு தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வாளர் முடியரசு கூறினார்.

Next Story