விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் ஒரு மூதாட்டிக்கு கொரோனா பாதிப்பு


விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் ஒரு மூதாட்டிக்கு கொரோனா பாதிப்பு
x
தினத்தந்தி 10 Jun 2020 4:27 AM GMT (Updated: 2020-06-10T09:57:15+05:30)

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை கொரோனா வைரஸ் நோயால் 384 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர்.

விழுப்புரம்,

 384 பேர்களில் 3 பேர்  ஏற்கனவே சிகிச்சை பலனின்றி இறந்துள்ள நிலையில் 329 பேர் பூரண குணமடைந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 52 பேர் அரசு மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சையில் இருந்து வருகின்றனர். இந்நிலையில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களில் நேற்று சிலரின் மருத்துவ பரிசோதனை அறிக்கைகளின் முடிவுகள் வந்தது.

இதில் விழுப்புரம் அருகே காணை ஒன்றியம் அரியலூர் திருக்கையை சேர்ந்த 65 வயதுடைய மூதாட்டி ஒருவருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் சென்னையில் இருந்து திரும்பி வந்தவர் ஆவார். தொடர்ந்து இவர், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இவரோடு சேர்த்து விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 385 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நோய் பாதிப்பில் இருந்து நேற்று ஒருவர் குணமடைந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

இதற்கிடையே நேற்று செஞ்சி பேரூராட்சி பகுதியை சேர்ந்த எஸ்.எஸ்.எல்.சி. மாணவி சென்னையில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வந்தார். இவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. முண்டியம்பாக்கம் அரசு மருத்துவகல்லூரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இருப்பினும் இவருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதா என்று சுகாதார துறை அதிகாரபூர்வமாக தெரிவிக்கவில்லை. அதே வேளையில் மாணவி வசித்த பகுதியில் தடுப்புகள் கட்டப்பட்டு, அவரது பெற்றோர் தனிமை படுத்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Next Story