கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ரெயில் நிலையத்தில் டிக்கெட் ரத்து கட்டணம் வினியோகம்


கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ரெயில் நிலையத்தில் டிக்கெட் ரத்து கட்டணம் வினியோகம்
x
தினத்தந்தி 10 Jun 2020 5:57 AM GMT (Updated: 2020-06-10T11:27:44+05:30)

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ரெயில் நிலையத்தில் டிக்கெட் ரத்து கட்டணம் வினியோகம் செய்யப்பட்டது. இதை பயணிகள் சமூக இடைவெளியை கடைபிடித்து பெற்றுச்சென்றனர்.

கடலூர்,

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் 25-ந்தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. இதனால் ரெயில் சேவைகள் வருகிற 30-ந்தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக ரெயிலில் செல்ல முன்பதிவு செய்த பயணிகள் ரத்து செய்யப்பட்ட டிக்கெட் கட்டணம் தங்களுக்கு எப்போது கிடைக்கும் என்று எதிர்பார்த்து காத்திருந்தனர்.

இதற்கிடையில் டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறுவது குறித்து தெற்கு ரெயில்வே அறிவிப்பை வெளியிட்டது. அதில் திருச்சி கோட்டத்தில் மார்ச் 22-ந்தேதி முதல் வருகிற 30-ந்தேதி வரையில் ரத்து செய்யப்பட்ட ரெயில்களுக்கான டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெற்றுக்கொள்ளும் வகையில் சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி புதுச்சேரி, காரைக்கால், நாகப்பட்டினம், திருவாரூர், விருத்தாசலம், திருவண்ணாமலை, சிதம்பரம், கடலூர் திருப்பாதிரிப்புலியூர், ஸ்ரீரங்கம் ஆகிய ரெயில் நிலையங்களில் கடந்த 8-ந்தேதி முதல் 100 சதவீத டிக்கெட் கட்டணத்தை பயணிகள் பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது.

இதற்காக டிக்கெட் கவுண்ட்டர்கள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும் என்று அறிவிக்கப்பட்டது. மார்ச் 22-ந்தேதி முதல் ஏப்ரல் 14-ந்தேதி வரை ரத்து செய்யப்பட்ட கட்டணத்தை கடந்த 8-ந்தேதி முதல் இன்று (புதன்கிழமை) வரையிலும், ஏப்ரல் 15-ந்தேதி முதல் ஏப்ரல் 30-ந்தேதி வரை ரத்து செய்யப்பட்ட டிக்கெட் கட்டணத்தை நாளையில்( வியாழக்கிழமை) இருந்தும், மே 1-ந்தேதி முதல் மே 15-ந்தேதி வரை ரத்து செய்யப்பட்ட டிக்கெட் கட்டணத்தை வருகிற 16-ந்தேதியில் இருந்தும், மே 16-ந்தேதியில் இருந்து மே 31-ந்தேதி வரை ரத்து செய்யப்பட்ட ரெயில்களுக்கு டிக்கெட் கட்டணத்தை வருகிற 21-ந்தேதியில் இருந்தும், கடந்த 1-ந்தேதியில் இருந்து வருகிற 30-ந்தேதி வரை ரத்து செய்யப்பட்ட ரெயில்களுக்கு டிக்கெட் கட்டணத்தை வருகிற 26-ந்தேதியில் இருந்தும் பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது.

இதன்படி கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ரெயில் நிலையம் கடந்த 8-ந்தேதி முதல் திறக்கப்பட்டது. இதில் ரத்து செய்யப்பட்ட ரெயில்களுக்கான டிக்கெட் கட்டணத்தை பயணிகள் பெற்றுச்செல்கின்றனர். கடந்த 2 நாட்களாக 100-க்கும் மேற்பட்ட பயணிகள் ரூ.1 லட்சத்திற்கும் மேல் தங்கள் டிக்கெட் கட்டணத்தை பெற்றுச்சென்றதாக ரெயில்வே நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதற்காக ரெயில் நிலைய கவுண்டர் முன்பு சமுக இடைவெளியை கடைபிடிக்க கட்டம் வரையப்பட்டுள்ளது. அங்கு போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். முக கவசம் அணிந்து தான் பயணிகள் வர வேண்டும் என்று ரெயில் வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Next Story