கொரோனா பரவலை கட்டுப்படுத்த வீடு, வீடாக கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் அதிகாரிகளுக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உத்தரவு


கொரோனா பரவலை கட்டுப்படுத்த    வீடு, வீடாக கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும்   அதிகாரிகளுக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உத்தரவு
x
தினத்தந்தி 11 Jun 2020 1:02 AM GMT (Updated: 2020-06-11T06:32:45+05:30)

கோவை மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க வீடு, வீடாக கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உத்தரவிட்டார்.

கோவை,

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு பணிகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டர் ராஜாமணி, மாநகர போலீஸ் கமிஷனர் சுமித்சரண், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார், மாநகராட்சி தனி அதிகாரி ஷ்ரவன்குமார் ஜடாவத், மாவட்ட வருவாய் அதிகாரி ராமதுரை முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசும்போது கூறியதாவது:-

கட்டுப்படுத்தப்படுகிறது

உலகெங்கிலும், பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்று, தமிழகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனையின்படி, மேற்கொள்ளப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் கட்டுப்படுத்தப்பட்டு வருகின்றது. இந்தியாவிலேயே, அதிக நபர்களுக்கு கொரோனா தொற்று பரிசோதனை நடைபெற்று வரும் மாநிலம் தமிழகம் ஆகும். கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவ தொடங்கிய காலத்தில் இருந்து பரிசோதனைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

கோவையில் ஊரக மற்றும் நகர்ப்புறப்பகுதிகளில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் முழுமையாக அகற்றப்பட்டுள்ளது. மேலும், ஊரடங்கு காலத்தில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளதால், வெளிமாநிலங்கள், வெளிமாவட்டங்களில் இருந்து பலர் கோவைக்கு வருகை தருகிறார்கள். அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளுதல் மற்றும் 14 நாட்கள் தனிமைப்படுத்துதல் என்பது கட்டாயம்.

வீடு வீடாக கண்காணிப்பு

அவ்வாறு தனிமைப்படுத்தப்பட்ட அனைவரையும் சம்பந்தப்பட்ட பகுதிகளில் உள்ள உள்ளாட்சித்துறை, வருவாய்த்துறை அலுவலர்கள் தினசரி கண்காணித்திட வேண்டும். கொரோனா தொற்று கண்டறியப்படும் நபர்களின் குடியிருப்பு பகுதிகளில் பரிசோதனைகளை மேலும் தீவிரப்படுத்தி வீடு வீடாக கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும்.

அதுபோலவே, கோவை மாவட்ட எல்லைகளில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு மையங்களில் சுகாதாரத்துறை, காவல்துறை, மற்றும் வருவாய்த்துறையினர் குழுவாக இணைந்து கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

பாதுகாப்பாக இருக்க வேண்டும்

கோவை மாவட்டத்தில் இதுவரை 23,486 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. மாவட்டத்தில் 166 நபர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், டாக்டர்கள் மற்றும் செவிலியர்களின் சிறப்பான சிகிச்சையினால் 148 நபர்கள் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மீண்டு தங்களது வீடுகளுக்கு திரும்பி உள்ளனர்.

இந்த நிலையில் புதிய தொற்றுகள் ஏதும் ஏற்படாத வகையில், தேவைகளுக்காக வெளியே வருபவர்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிவதுடன், சமூக இடைவெளியை பின்பற்றவேண்டும். மேலும் முதல்-அமைச்சர், மாவட்ட நிர்வாகம், அரசு அதிகாரிகள் என பல்வேறு தரப்பினரும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிப்பது பொதுமக்கள் பாதுகாப்பாக இருப்பதற்கு என்பதனை மக்கள் அனைவரும் உணர வேண்டும்.

திட்டப்பணிகள்

அதுபோலவே, கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு பணிகளை மேற்கொள்வதுடன், கோவை மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகளிலும் அனைத்து துறை அதிகாரிகளும் கவனம் செலுத்தவேண்டும். கோவை மாநகராட்சி பகுதிகளில் ஊரடங்கு காலங்களில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ஸ்மார்ட் சிட்டி திட்டங்களை முடிக்க அதிகாரிகள் பணியாற்றிட வேண்டும்.

பாதாள சாக்கடை திட்டப்பணிகளை விரைந்து செயல்படுத்திட வேண்டும். அதுபோலவே அனைத்து துறையினரும் அரசின் திட்டங்களை முனைப்புடன் செயல்படுத்திட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் அனைத்துத்துறை அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story