கொரோனாவில் இருந்து தப்பிப்பது எப்படி? மதுரை அரசு ஆஸ்பத்திரியில் 453 செவிலியர்களுக்கு சிறப்பு பயிற்சி


கொரோனாவில் இருந்து தப்பிப்பது எப்படி?   மதுரை அரசு ஆஸ்பத்திரியில் 453 செவிலியர்களுக்கு சிறப்பு பயிற்சி
x
தினத்தந்தி 13 Jun 2020 1:06 AM GMT (Updated: 13 Jun 2020 1:06 AM GMT)

கொரோனா பாதிப்பின்றி பாதுகாப்பாக இருப்பது குறித்து மதுரை அரசு ஆஸ்பத்திரியில் 453 செவிலியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.

மதுரை, 

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனா வைரசின் தாக்கம் குறைந்தபாடில்லை. மதுரையை பொறுத்தமட்டிலும் நாளுக்கு நாள் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. சாதாரண மக்கள் மட்டுமின்றி கொரோனா பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் கொரோனா வார்டில் பணி செய்த சுகாதார பணியாளர்கள் உள்ளிட்டோருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது. அவர்களையும் கொரோனா விட்டபாடில்லை.

இதனால் செவிலியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா வைரசில் இருந்து தங்களை எவ்வாறு பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்பது குறித்து சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

4 பேர் குழு

அதன்படி மதுரை அரசு ஆஸ்பத்திரி டீன் சங்குமணி அறிவுரையின்பேரில், மதுரை அரசு செவிலியர் கல்லூரியை சேர்ந்த செவிலிய போதகர்கள் மகேஸ்வரி, செல்வநாராயணன், அரசு செவிலியர் பயிற்சி பள்ளியை சேர்ந்த ரமணி, சொர்ணதேவி ஆகிய 4 பேர் கொண்ட குழுவினர் சிறப்பு பயிற்சி வகுப்பினை நடத்தி வருகின்றனர். இந்த சிறப்பு வகுப்பில் கொரோனா வைரஸ் என்பது என்ன? அது எவ்வாறு பரவுகிறது, அதற்கு சிகிச்சை அளிப்பது எவ்வாறு? நோய் தொற்று ஏற்படாமல் தற்காத்து கொள்ள எந்த வழிமுறைகளை கையாள வேண்டும், பாதுகாப்பு உபகரணங்களை எப்படி கையாளுவது? நோயாளிகளுக்கு பரிசோதனை செய்யும்போது எவ்வாறு கவனமாக இருக்க வேண்டும் என்பது குறித்த விவரங்கள் வீடியோ படக்காட்சி மூலம் தெளிவாக எடுத்துரைக்க பட்டு வருகிறது. சுமார் 2 மணி நேரம் நடைபெறும் இந்த பயிற்சி வகுப்பு கடந்த 40 நாட்களாக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் உள்ள கருத்தரங்கத்தில் நடைபெற்று வருகிறது.

மதுரை ஆஸ்பத்திரியில் பணி செய்யும் 453 செவிலியர்களுக்கு இந்த சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது. இதுபோல் செவிலிய கண்காணிப்பாளர்கள் 30 பேருக்கும், மதுரை அரசு ஆஸ்பத்திரி பணி செய்யும் சுகாதார பணியாளர்கள் 354 பேருக்கும் இந்த பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.

Next Story