கோவில்பட்டியில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு நிவாரண பொருட்கள் - அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்கினார்


கோவில்பட்டியில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு நிவாரண பொருட்கள் - அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்கினார்
x
தினத்தந்தி 13 Jun 2020 11:00 PM GMT (Updated: 13 Jun 2020 6:20 PM GMT)

கோவில்பட்டியில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு நிவாரண பொருட்களை அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்கினார்.

கோவில்பட்டி,

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வேலாயுதபுரத்தில் உள்ள ஈ.வே.அ.வள்ளிமுத்து உயர்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு கொரோனா நிவாரணமாக அரிசி, பருப்பு மற்றும் மளிகை பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்துகொண்டு, மாணவ, மாணவிகள் 500 பேருக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்.

இதைத்தொடர்ந்து அவர் கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில், கொரோனா தொற்று நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று பூரண குணம் அடைந்த 3 பேரை வீட்டுக்கு வழியனுப்பி வைத்தார். மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி முன்னிலை வகித்தார்.

பின்னர் அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியதாவது:-

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று (அதாவது நேற்று முன்தினம்) வரை மொத்தம் 16 ஆயிரத்து 536 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் 397 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இன்று (அதாவது நேற்று) கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று பூரண குணம் அடைந்த 3 பேர் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர். அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் அனைவரும் விரைவில் குணம் அடைந்து வீடு திரும்பும் நிலையில் உள்ளனர்.

தூத்துக்குடி மாவட்ட எல்லைகளில் சோதனை சாவடிகள் அமைத்து வெளிமாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வருபவர்களுக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டு தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுக்கு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த தொடர் கண்காணிப்பால் தான் தூத்துக்குடி மாவட்டத்தில் சமூக பரவல் ஏற்படவில்லை.

தூண்டில் வளைவு

கொரோனா வைரஸ் தொற்று காலத்திலும் தூத்துக்குடி மாவட்டத்திற்கு வளர்ச்சி பணிகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து வருகிறார். ஆலந்தலை மீனவ கிராமத்தில் ரூ.52.46 கோடி மதிப்பில் தூண்டில் வளைவு அமைப்பதற்கு அவர் அரசாணை வெளியிட்டுள்ளார். இதற்கான பணிகளும் விரைவில் தொடங்கப்பட உள்ளது.

மாவட்டத்தில் பணியாற்றிய வெளிமாநிலங்களை சேர்ந்த 5 ஆயிரத்து 500 தொழிலாளர்கள் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர். அதேபோல் வெளி மாநிலங்களில் பணியாற்றிய தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 3 ஆயிரத்து 500 தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர். தூத்துக்குடி துறைமுகத்திற்கு கடந்த 2-ந் தேதி இலங்கை நாட்டில் இருந்து சுமார் 700 பயணிகளுடன் ஒரு கப்பலும், 7-ந் தேதி மாலத்தீவில் இருந்து சுமார் 700 பயணிகளுடன் ஒரு கப்பலும் வந்தடைந்தது. இந்த 2 கப்பல்களில் வந்த அனைவருக்கும் கொரோனா தொற்று பரிசோதனை செய்ததில் தலா ஒருவர் வீதம் 2 பயணிகளுக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மற்ற பயணிகள் அனைவரும் சொந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

கப்பல் வருகை

ஈரான் நாட்டில் இருந்து வருகிற 21-ந் தேதி கப்பல் வருகை தர உள்ளது. இதில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் அதிக அளவில் வர உள்ளார்கள். இதையொட்டி மாவட்ட நிர்வாகத்தின் மூலம் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது.

இவ்வாறு அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.

தொடர்ந்து அவர், கோவில்பட்டி நகராட்சி அலுவலகத்தில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக கிருமி நாசினி தெளிக்கும் பணிகளையும் பார்வையிட்டார். மேலும், கோவில்பட்டி கதிரேசன் பகுதியில் புதிய தார்சாலை அமைக்கும் பணிகள் நடைபெறுவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார். கோவில்பட்டி நகராட்சி அருகில் உள்ள உள்ள அம்மா உணவகத்தில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் உணவுகளை பார்வையிட்டார்.

நிகழ்ச்சிகளில், கோவில்பட்டி உதவி கலெக்டர் விஜயா, கோவில்பட்டி நகராட்சி ஆணையர் ராஜாராம், சுகாதார பணிகள் இணை இயக்குநர் (பொறுப்பு) பொன்இசக்கி, கோவில்பட்டி சுகாதார பணிகள் துணை இயக்குனர் அனிதா, கோவில்பட்டி தாசில்தார் மணிகண்டன், துணை போலீஸ் சூப்பிரண்டு கலைக்கதிரவன், கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர் கமலவாசன், உறைவிட மருத்துவர் புவனேஷ்வரி, கோவில்பட்டி நாடார் உறவின் முறை சங்க தலைவர் ஏ.பி.கே.பழனிசெல்வம், வள்ளிமுத்து பள்ளி தலைவர் ரவீந்தரராஜா, செயலாளர் வேல்முருகேசன், தலைமை ஆசிரியர் துரை, பொதுநல மருத்துவமனை தலைவர் திலகரத்தினம், எஸ்.எஸ்.டி.எம். கல்லூரி செயலாளர் கண்ணன், மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் ராமச்சந்திரன், முக்கிய பிரமுகர்கள் அய்யாத்துரை பாண்டியன், விஜயபாண்டியன், சுப்புராஜ், பாலமுருகன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story