திருப்பத்தூர் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்


திருப்பத்தூர் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 16 Jun 2020 4:53 AM GMT (Updated: 16 Jun 2020 4:53 AM GMT)

புதிய ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் வழங்க வேண்டும் என்று கூறி அப்பகுதி மக்கள் காலிக்குடங்களுடன் ஜெயபுரம் கூட்ரோட்டில் புதுப்பேட்டை-திருப்பத்தூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

திருப்பத்தூர்,

திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கதிரிமங்கலம் ஊராட்சி ஜெயபுரம் கூட்ரோடு பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு அந்த பகுதியில் உள்ள ஆழ்துளை கிணறு மூலம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து குடிநீர் வழங்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் கடந்த 3 மாதங்களாக ஆழ்துளை கிணற்றில் தண்ணீர் இல்லாததால் ஒரு நாள் விட்டு ஒரு நாள் டிராக்டர் மூலம் குடிநீர் வழங்கப்பட்டதாக தெரிகிறது. இந்த குடிநீர் போதிய அளவு இல்லாததால் புதிய ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் வழங்க வேண்டும் என்று கூறி அப்பகுதி மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் காலிக்குடங்களுடன் ஜெயபுரம் கூட்ரோட்டில் புதுப்பேட்டை-திருப்பத்தூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் தாலுகா போலீசார் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் முருகேசன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதைத் தொடர்ந்து பொது மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த சாலை மறியலால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story