சாத்தான்குளம் சம்பவத்துக்கு கண்டனம்: சென்னையில் பல்வேறு இடங்களில் கடை அடைப்பு போராட்டம்
சாத்தான்குளம் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து சென்னையில் பல்வேறு இடங்களில் கடைகளை அடைத்து வியாபாரிகள் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். தடையை மீறி ஊர்வலம் சென்ற வியாபாரிகளும் கைது செய்யப்பட்டனர்.
சென்னை,
சாத்தான்குளம் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து சென்னையில் பல்வேறு இடங்களில் கடைகளை அடைத்து வியாபாரிகள் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். தடையை மீறி ஊர்வலம் சென்ற வியாபாரிகளும் கைது செய்யப்பட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தடையை மீறி கடையை திறந்ததாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பெனிக்ஸ் ஆகிய இருவரும் திடீரென உயிரிழந்தனர். போலீசார் தாக்கியதில் தான் தந்தை-மகன் உயிரிழந்ததாக கூறி உறவினர்கள் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் வியாபாரிகள் தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டு கடைகள் அடைக்கும் போராட்டம் நடந்தது.
சென்னையிலும் விருகம்பாக்கம், பெரம்பூர், வண்ணாரப்பேட்டை, புரசைவாக்கம், தியாகராயநகர், பாண்டிபஜார் உள்ளிட்ட நகர் பகுதிகளிலும், பம்மல், பல்லாவரம் உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் நேற்று வியாபாரிகள் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக உயிரிழந்த ஜெயராஜ்-பெனிக்ஸ் ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிகளும் பல இடங்களில் நடந்தன.
தடையை மீறு ஊர்வலம்
சென்னை திருவல்லிக்கேணியில் ஜெயராஜ்-பெனிக்ஸ் உருவப்படங்களுக்கு தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை சார்பில் பேரவையின் பொதுச்செயலாளர் கே.சி.ராஜா தலைமையில் மலரஞ்சலி செலுத்தப்பட்டது. சென்னை விருகம்பாக்கத்தில் ஜெயராஜ்-பெனிக்ஸ் உருவப்படங்களுக்கு அஞ்சலி செலுத்திய தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை தலைமை ஒருங்கிணைப்பாளர் அருண்குமார் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் மோட்டார் வாகனங்களில் இறுதி அஞ்சலி ஊர்வலம் நடத்தினர். ஊரடங்கு காலத்தில் ஊர்வலம் நடத்துவது தவறு என்பதால் போலீசார் அவர்களை இடைமறித்து அனைவரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட வியாபாரிகள் அனைவரும் அருகில் உள்ள திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர்.
அதேபோல அஸ்தினாபுரம் வியாபாரிகள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு வியாபாரிகள் சங்கங்கள் சார்பில் நகரின் பல்வேறு இடங்களில் ஜெயராஜ்-பெனிக்ஸ் உருவப்படங்களுக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டு கைதான வியாபாரிகள் கூறுகையில், லாக்-அப் இறப்பு நிகழ்வுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும். தடையை மீறி கடையை திறந்ததற்காக இப்படி ஒரு முடிவு என்பதை நிச்சயம் ஏற்கவே முடியாது. உயிரிழப்பு காரணமாக உடல்நலக்கோறாறு என்று கூறுவதை ஏற்கவே முடியாது. போலீசார் தாக்கியதிலேயே தந்தை-மகன் இருவரது உயிரிழப்பும் ஏற்பட்டிருக்கிறது.
எனவே சம்பந்தப்பட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், பாதிக்கப்பட்டோர் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீட்டை அரசு வழங்கவேண்டும். இல்லையென்றால் தொடர் போராட்டங்களை முன்னெடுப்போம், என்றனர்.
உயிரிழந்த தந்தை-மகன் இருவரும் செல்போன் கடை வைத்திருந்தவர்கள் என்பதால் அவர் களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நகரின் பெரும்பாலான செல்போன் கடைகளும் நேற்று மூடப்பட்டிருந்தன.
Related Tags :
Next Story