பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தில் சேர விவசாயிகளுக்கு கலெக்டர் அழைப்பு
பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தில் சேர விவசாயிகளுக்கு கலெக்டர் அழைப்பு விடுத்துள்ளார்.
காஞ்சீபுரம்,
காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டமானது இயற்கை சீற்றங்களால் பயிர்களுக்கு பாதிப்பு ஏற்படும்போதும், மகசூல் குறைவு ஏற்படும் போதும் விவசாயிகளுக்கு பேருதவி புரியும் திட்டமாகும். இந்த ஆண்டுக்கான (2020-21) திருந்திய பயிர் காப்பீடு திட்டத்தில் சிறிய மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது.
சென்ற ஆண்டு வரை இந்த திட்டத்தில் கடன் பெறாத விவசாயிகளுக்கு கட்டாயமாகவும், கடன் பெற்ற விவசாயிகளுக்கு விருப்பத்தின் அடிப்படையிலும் காப்பீடு செய்யப்பட்டு வந்தது. தற்போது இந்த திருந்திய பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் கடன் பெறும் மற்றும் கடன் பெறாத விவசாயிகள் அனைவரும் தங்களது விருப்பத்தின் அடிப்படையில் மட்டுமே பயிர் காப்பீடு செய்ய இயலும்.
சொர்ணாவாரி பருவத்தில் நெல்லுக்கு ரூ.601, நிலக்கடலைக்கு ரூ.225 பிரீமியமாக செலுத்த வேண்டும். பிரீமியம் செலுத்த கடைசி நாள் அடுத்த மாதம் 31-ந்தேதி. உளுந்துக்கு ரூ.331, எள்ளுக்கு ரூ.183 பிரீமியமாக செலுத்த வேண்டும். பிரீமியம் செலுத்த கடைசிநாள் அடுத்த மாதம் 15-ந்தேதி.
விவசாயிகள் தங்களது நிலத்தின் அடங்கல் நகல், பட்டா நகல், ஆதார் அட்டை நகல், வங்கி கணக்கு புத்தக முதல் பக்க நகல் போன்றவற்றுடன் அருகில் உள்ள பொது சேவை மையங்கள், வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை அணுகி பயிர்களை காப்பீடு செய்து கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story