சுருக்குமடி வலை படகுகளுக்கு ‘சீல்’ வைப்பு: அதிகாரிகள் வந்த வாகனத்தை மீனவர்கள் சிறை பிடித்து போராட்டம்


சுருக்குமடி வலை படகுகளுக்கு ‘சீல்’ வைப்பு: அதிகாரிகள் வந்த வாகனத்தை மீனவர்கள் சிறை பிடித்து போராட்டம்
x
தினத்தந்தி 2 July 2020 6:13 AM IST (Updated: 2 July 2020 6:13 AM IST)
t-max-icont-min-icon

கடலூர் துறைமுகத்தில் சுருக்குமடி வலை படகுகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டதால், அதிகாரிகள் வந்த வாகனத்தை மீனவர்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடலூர் முதுநகர்,

கடலூர் துறைமுகத்தில் சுருக்குமடி வலை படகுகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டதால், அதிகாரிகள் வந்த வாகனத்தை மீனவர்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

படகுகளுக்கு ‘சீல்’ வைப்பு

கடலூர் துறைமுகத்தில் மீனவர்கள் சிலர், தங்களது படகுகளில் சுருக்குமடி வலையை பயன்படுத்தி கடலுக்கு மீன்பிடிக்க செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியானது. இதை அடுத்து கடலூர் மீன்வளத்துறை அதிகாரிகள் துணை இயக்குனர் காத்தவராயன், உதவி இயக்குனர் ரம்யா லட்சுமி, கோட்டாட்சியர் ஜெகதீஸ்வரன், துணை போலீஸ் சூப்பிரண்டு சாந்தி, முதுநகர் இன்ஸ்பெக்டர் பால் சுதர் ஆகியோர் தலைமையில் கடலூர் துறைமுகத்திற்கு நேற்று மதியம் சென்றனர்.

அங்கு தடை செய்யப்பட்ட மீன்பிடி வலைகளை( சுருக்குமடி) பயன்படுத்தி மீன் பிடிக்கும் 20-க்கும் மேற்பட்ட படகுகளின் கேபின்களுக்கு ‘சீல்’ வைத்தனர். இந்த கேபின்களில் மொத்தம் 150 படகுகள் உள்ளது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த மீனவர்கள், அதிகாரிகளின் இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கொரோனா வைரஸ் ஊரடங்கு மற்றும் மீன்பிடி தடைக்காலம் ஆகியவற்றால் வாழ்வாதாரம் இழந்து தவித்து வரும் வேளையில் இதுபோன்று ஏன் ‘சீல்’ வைக்கிறீர்கள் என்று கேட்டு அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை அதிகாரிகள் சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர்.

வாகனங்கள் சிறைபிடிப்பு

இதற்கிடையே கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாண்டியன் மீனவர்களிடையே பேச்சுவார்த்தை நடத்தினார். இருப்பினும் மீனவர்கள் சமாதானம் அடையவில்லை. இந்த சூழ்நிலையில் மீன்வளத்துறை துணை இயக்குனர் காத்தவராயன், உதவி இயக்குனர் ரம்யா லட்சுமி ஆகியோர் வந்த வாகனத்தை மீனவர்கள் சிறை பிடித்து ஒரு மணி நேரத்திற்கு மேலாக மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீஸ் உயர் அதிகாரிகள் மீனவர்களிடையே பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் மீனவர்கள் அடுத்த 2 நாட்களுக்கு கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல மாட்டார்கள் என்று தெரிவித்தனர். இதன் பின்னர் “சீல்” வைக்கப்பட்ட 20-க்கும் மேற்பட்ட படகுகளில் வைக்கப்பட்ட ‘சீல்’ அகற்றப்பட்டது.

போலீஸ் குவிப்பு

மேலும் இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் மற்றும் உயர் அதிகாரிகளிடம் பேசி நாளை( வெள்ளிக்கிழமை) இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்படும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதையடுத்து மீனவர்கள் அமைதியாக கலைந்து சென்றனர். தொடர்ந்து அங்கு பதற்றம் நிலவி வருவதால் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Next Story