ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 17 பேருக்கு கொரோனா; பாதிப்பு எண்ணிக்கை 191 ஆக உயர்வு தபால் அலுவலகம் மூடப்பட்டது


ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 17 பேருக்கு கொரோனா; பாதிப்பு எண்ணிக்கை 191 ஆக உயர்வு தபால் அலுவலகம் மூடப்பட்டது
x
தினத்தந்தி 2 July 2020 10:30 PM GMT (Updated: 2 July 2020 6:05 PM GMT)

ஈரோடு மாவட்டத்தில் நேற்று புதிதாக 17 பேருக்கு கொரோனா ஏற்பட்டதால் பாதிப்பு எண்ணிக்கை 191 ஆக உயர்ந்துள்ளது.

ஈரோடு, ஜூலை.3-

ஈரோடு மாவட்டத்தில் நேற்று புதிதாக 17 பேருக்கு கொரோனா ஏற்பட்டதால் பாதிப்பு எண்ணிக்கை 191 ஆக உயர்ந்துள்ளது. பெண் ஊழியருக்கும் தொற்று உறுதியானதால் தபால் அலுவலகம் மூடப்பட்டது.

17 பேருக்கு தொற்று

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக பல்வேறு பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டு கொரோனா பரிசோதனையும் அதிகரிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் கண்டறியப்பட்டு, அவர்களுக்கும் பரிசோதனை செய்யப்படுகிறது.

நேற்று புதிதாக 17 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. இதில் ஈரோடு ராஜாஜிபுரத்தை சேர்ந்த 12 பேருக்கும், பி.பி.அக்ரஹாரத்தை சேர்ந்த 35 வயது ஆணுக்கும், கோபிசெட்டிபாளையத்தை சேர்ந்த 53 வயது ஆணுக்கும், சித்தோட்டை சேர்ந்த 53 வயது ஆண், 28 வயது பெண் ஆகியோருக்கும், மொடக்குறிச்சியை சேர்ந்த 78 வயது ஆணுக்கும் பாதிப்பு ஏற்பட்டது. இதில் ராஜாஜிபுரத்தில் 6 வயதுடைய ஒரு சிறுமியும், 17 வயதுடைய 2 சிறுமிகளும் அடங்குவர்.

5 நாட்கள்

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மாவட்டத்தில் நேற்று 191 ஆக உயர்ந்துள்ளது. இதில் 109 பேர் பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். மேலும், 3 ஆயிரத்து 548 பேர் வீட்டு காவலில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

கடந்த 5 நாட்களில் மட்டும் 81 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஈரோட்டில் கொரோனா தனது விஸ்வரூபத்தை காண்பிக்க தொடங்குவதற்கு முன்பே கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. கடந்த சில தினங்களுக்கு முன்பு ஈரோடு செய்தி மக்கள் தொடர்புத்துறை அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் சென்று வந்த பகுதிகளில் தொடர்புடையவர்கள் கண்டறியப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது. அந்த நபர் தபால் அனுப்புவதற்காக ஈரோடு தலைமை தபால் அலுவலகத்துக்கு சென்று வந்திருந்ததால், அந்த அலுவலகத்தில் 7 ஊழியர்களுக்கு கடந்த 27-ந் தேதி பரிசோதனை செய்யப்பட்டது.

தபால் அலுவலகம்

இந்த பரிசோதனையின் முடிவில் தபால் அலுவலக கவுண்ட்டரில் பணியாற்றிய 32 வயது பெண்ணுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அங்கு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் நேரில் சென்று ஆய்வு நடத்தினார். இதைத்தொடர்ந்து தபால் அலுவலகம் நேற்று மாலை மூடப்பட்டது. மேலும், அங்குள்ள ஊழியர்களுக்கு இன்று (வெள்ளிக்கிழமை) கொரோனா பரிசோதனை செய்யப்பட உள்ளது.

மேலும், கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண் ஊழியர் வீடு உள்ள வீரப்பன்சத்திரம் ஜான்சிநகர் பகுதி தனிமைப்படுத்தப்பட்டது. அங்கு கிருமி நாசினி தெளித்தல் உள்ளிட்ட சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டன. தபால் அலுவலகத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான வீடியோக்களை மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து, அலுவலகத்துக்கு யார், யார்? வந்து சென்றார்கள் போன்ற விவரங்களை சேகரித்து வருகிறார்கள். அவர்களையும் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டு உள்ளனர்.

Next Story