திருப்பூர் அருகே அஸ்திவாரம் இல்லாமல் தரையில் நிற்கும் கல்மண்டபம் தமிழர்களின் பாரம்பரிய கட்டிட கலை பாதுகாக்கப்படுமா?


திருப்பூர் அருகே அஸ்திவாரம் இல்லாமல் தரையில் நிற்கும் கல்மண்டபம்   தமிழர்களின் பாரம்பரிய கட்டிட கலை பாதுகாக்கப்படுமா?
x
தினத்தந்தி 7 July 2020 5:16 AM GMT (Updated: 7 July 2020 5:16 AM GMT)

திருப்பூர் அருகே அஸ்திவாரம் இல்லாமல் தரையில் நிற்கும் கற்தூண்கள் கொண்ட சாவடி அமைக்கப்பட்டு உள்ளது. தமிழர்களின் பாரம்பரியமிக்க இந்த கட்டிட கலை பாதுகாக்கப்படுமா? என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


திருப்பூர், 

எந்திரத்தனமாக மாறிப்போன மனித வாழ்க்கையில் இன்றைய நாகரிக உலகில் அக்கம் பக்கத்தினரை கூட நாம் அறிந்து வைத்திருக்கவில்லை. முன்னோர் வகுத்த வாழ்வியல் முறைகளை அலட்சியம் செய்வது வருந்தத்தக்க விஷயம் தான். நம் முன்னோர் கூட்டு வாழ்க்கை, உணவே மருந்து, ஒழுக்கம், சுயகட்டுப்பாடு உள்ளிட்ட நற்பண்புகளை நமக்காக விட்டுச்சென்றனர்.

அதுமட்டுமின்றி காலத்தால் அழியாத பல கட்டுமானங்களையும் விட்டுச் சென்றுள்ளனர். அவற்றின் எச்சங்களை தற்போதும் அங்கொன்றும் இங்கொன்றுமாக நம்மால் காண முடிகிறது. அப்படிப்பட்ட எச்சங்களின் மூலமும் நமக்கான வாழ்வியல் மந்திரங்கள் மற்றும் அறிவியல் ஆகியவற்றை இன்றளவும் நம்மால் உணர முடிகிறது. இன்றைய காலக்கட்டிடங்கள் கூட 50, 60 ஆண்டுகளில் பழுதடைந்து விடுகின்றன. ஆனால் அன்றைய கால தமிழர்களின் கட்டிடங்கள் இன்றும் வரலாறு சொல்வது மிகையல்ல. தஞ்சாவூர் பெரிய கோவில், மதுரை மீனாட்சியம்மன் கோவில் என இன்னும் பலவற்றை சொல்லி கொண்டே போகலாம். ஆனால் அன்றைய கட்டிட கலையை இன்று பாதுகாக்க வேண்டியது அவசியம்.

தரையில் நிற்கும் சாவடி

அந்த வகையில் அஸ்திவாரமே இல்லாமல் தரையில் நிற்கும் கல்மண்டபத்தை பார்த்து இருக்கிறீர்களா? ஆமாம். நம் தமிழர்களின் பாரம்பரிய கட்டிட கலை ஒன்று திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி அருகே உள்ள மொரட்டுபாளையம் காவேரி நகர் பகுதியில் உள்ளது. இங்கு தான் சுமார் 300 ஆண்டுகளுக்கு முந்தைய ஆங்கிலேயர் கால சாவடி மற்றும் அதன் அருகிலேயே பழமையான மாதேஸ்வரன் கோவில் உள்ளன. இந்த சாவடி(மண்டபம்) கட்டப்பட்டுள்ள விதம் தற்போதுள்ள கட்டிடப்பொறியாளர்களே வியப்புக்குள்ளாக்கும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது. ஆறு தூண்கள் மண்ணில் குழி எதுவும் தோண்டாமல் அப்படியே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதன்மேல் கருங்கற்கள் மட்டும் ஒரு அடி அளவிற்கு செங்கல் சுண்ணாம்புக் கலவை கொண்ட பூச்சும் அமைக்கப்பட்டுள்ளது.

அஸ்திவாரம் எதுவும் இல்லாமல் தரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இந்த கல்மண்டபம் காண்போரை வியப்பில் ஆழ்த்துகிறது. மழைக்காலங்களில் இந்த மண்டபத்தில் தஞ்சம் புகுந்து உள்ளனர் அன்றைய முன்னோர். 6 தூண்கள் இந்த சாவடியை தாங்கி பிடித்து இருப்பதால் இதை ஆறுகால் சாவடி என்றும், ஆறுகால் மண்டபம் என்றும் அப்பகுதி மக்கள் அழைக்கின்றனர்.

ஆங்கிலேயர்கள் வரி வசூல் செய்த இடம்

அதோடு இந்த ஆறுகால் சாவடியை ஆங்கிலேயர்கள் தொழிலாளர்களுக்கு கூலி வழங்கும் இடமாகவும், வரிவசூல் செய்யும் இடமாகவும் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. இங்குள்ள மாதேஸ்வரன் கோவில் மிகவும் பழமை வாய்ந்தது. முன்பு இப்பகுதியை சேர்ந்த ஒருவர் கோவிலில் பூஜை செய்து வந்தார். காட்டுப்பகுதியில் கோவில் இருப்பதால் போதிய பக்தர்கள் வருவதில்லை. தற்போது பூஜை, புனஸ்காரம் இல்லாமல் கோவில் உள்ளது. நந்தி சிலையும் சிதிலமடைந்து காணப்படுகிறது. பழமை வாய்ந்த கட்டிடத்தில் உள்ள இந்த கோவிலை பராமரித்து ஒரு கால பூஜையாவது நடத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியில் உள்ள ஆன்மிக அன்பர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

பல நூற்றாண்டுகளுக்கு முன் அறிவிலும், சிந்தனையிலும், நாகரிகத்திலும் சிறந்து விளங்கிய தமிழர்கள் அனுபவ அறிவால் இது போன்ற வியக்கத்தக்க படைப்புகளை விட்டு சென்றுள்ளனர். ஆனால் இன்று சிதிலமடைந்து பயனில்லாத நிலையில் உள்ள படைப்புகளை நாம் அறியாத அளவில் இருப்பது வேதனைக்குரியது. எனவே இது போன்ற அரிய அபூர்வமான கால வெள்ளத்தால் அழிந்தும் அழியாமல் எஞ்சியவைகளை பாதுகாத்திட அரசு முன் வரவேண்டும். தமிழர்களின் பாரம்பரிய கட்டிட கலையை பாதுகாக்க வேண்டும் என்பதே அப்பகுதியில் உள்ள சமூக ஆர்வலர்களின் விருப்பம் ஆகும்.

Next Story