காற்றில் பறந்த சமூக இடைவெளி: கொரோனா அச்சமின்றி பொருட்கள் வாங்க அலைமோதிய மக்கள்


காற்றில் பறந்த சமூக இடைவெளி: கொரோனா அச்சமின்றி பொருட்கள் வாங்க அலைமோதிய மக்கள்
x
தினத்தந்தி 11 July 2020 11:42 PM GMT (Updated: 11 July 2020 11:42 PM GMT)

சமூக இடைவெளியை காற்றில் பறக்கவிட்டுவிட்டு, கொரோனா அச்சமின்றி மக்கள் பொருட்கள் வாங்க அலைமோதினர். இதனால் திண்டுக்கல் முக்கிய சாலைகளில் கடும் நெரிசல் ஏற்பட்டது.

திண்டுக்கல்,

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில், இந்த மாதம் அனைத்து ஞாயிற்றுக்கிழமையும் அனைத்து கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. அதன்படி இன்று இந்த மாதத்தின் 2-வது நாள் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி எந்தவித கட்டுப்பாடும் தளர்வு செய்யப்படுவது இல்லை. இதனால் அனைத்து வகையான கடைகளும் அடைக்கப்படுகிறது.

திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை ஏற்கனவே வெவ்வேறு பகுதிகளில் வியாபாரிகள் கடைகளை திறக்கும் நேரத்தை குறைத்துள்ளனர். மேலும் இன்று முழுமையான ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. இதனால் மக்கள் தங்களுக்கு தேவையான பொருட் களை வாங்குவதற்காக நேற்று கடைகளுக்கு படையெடுத்தனர். திண்டுக்கல் ரதவீதிகள், மெயின்ரோடு, கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

மளிகை பொருட்கள், காய்கறிகள், மீன், இறைச்சி என அனைத்து விதமான பொருட் களையும் பொதுமக்கள் கூட்டத்துடன், கூட்டமாக வாங்கினர். பலரும் கொரோனா அச்சமின்றி சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் நெருக்கமாக நின்று கொண்டிருந்தனர். சுகாதாரத்துறையினர் மற்றும் போலீசார் எச்சரித்தும் மக்கள் கண்டுகொள்ளவில்லை.

மேலும் சிலர் முக கவசம் அணியாமல் சர்வ சாதாரணமாக கடைகளுக்கு வந்து சென்றனர். இதில் பலர் இருசக்கர வாகனங்கள், கார்களில் கடைகளுக்கு வந்தனர். ஒரே நேரத்தில் மக்கள் குவிந்ததால், அரசமரத்தெரு, ரதவீதிகள், மெயின்ரோடு உள்பட நகரின் முக்கிய சாலைகளில் கடுமையான நெரிசல் ஏற்பட்டது. ஒவ்வொரு வாரமும் இதே நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே, நெரிசல் மற்றும் கொரோனா பரவலை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படுமா? என்பது சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. 

Next Story