திருப்பூர் மாவட்டத்தில் ஊரடங்கிலும் மதுவிற்பனை அமோகம்


திருப்பூர் மாவட்டத்தில் ஊரடங்கிலும் மதுவிற்பனை அமோகம்
x
தினத்தந்தி 13 July 2020 11:20 AM IST (Updated: 13 July 2020 11:20 AM IST)
t-max-icont-min-icon

முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் மது விற்பனை அமோகமாக நடந்துள்ளது.

திருப்பூர்,

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்த மாதம் ஞாயிற்றுக்கிழமை தோறும் முழு ஊரடங்கை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி தொழில் நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், கடைகள் உள்ளிட்டவைகள் மட்டுமின்றி அரசு டாஸ்மாக் மதுபானக் கடைகளும் மூடப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. நேற்று அறிவிக்கப்பட்ட முழு ஊரடங்கின் போது திருப்பூர் மாநகரம் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டு பொதுமக்கள் நடமாட்டம் இன்றி சாலைகள் வெறிச்சோடி காட்சியளித்தன.

இந்த நிலையில் ஊரடங்கு நாளில் தங்களுக்கு தேவையான மதுபான வகைகளை நேற்று முன்தினமே மதுப்பிரியர்கள் மொத்தமாக வாங்கிச் சென்றனர். இருப்பினும் நேற்று திருப்பூர் மாநகரம் மற்றும் மாவட்டம் முழுவதும் அனுமதியின்றி மது விற்பனை அதிகளவில் நடைபெற்றது. அதுபோல் பார்களிலும் மதுவிற்பனை பெற்றது.

திருப்பூர் யூனியன் மில் ரோடு, சாமுண்டிபுரம், கே.வி.ஆர்.நகர், அணைப்பாளையம், பாண்டியன் நகர், திருமுருகன்பூண்டி, கோவில் வழி, செவந்தாம்பாளையம், இடுவம்பாளையம், சிறுபூலுவபட்டி, ஆண்டிபாளையம் மட்டுமின்றி மாநகரின் அனைத்து பகுதிகளிலும் அனுமதியின்றி மது விற்பனை அதிகளவில் நடந்தது. மாநகரில் இயங்கும் பார்களில் வைத்தும், ஊருக்கு ஒதுக்குப்புறமான பகுதிகளிலும் மது விற்பனை நடைபெற்றது. கூடுதல் விலைக்கு விற்கப்பட்ட மதுபான வகைகளை மதுப் பிரியர்கள் வாங்கி சென்றனர்.

மேலும் தாராபுரம் ரோடு, பல்லடம் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் இயங்கும் டாஸ்மாக் கடை பகுதியிலேயே மது விற்பனை ஜோராக நடைபெற்றது. இதே போல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மது விற்பனை நடைபெற்றதாக கூறப்படுகிறது. 

Next Story