கன்னியாகுமரி அருகே பரிதாபம் மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலி நண்பர் படுகாயம்


கன்னியாகுமரி அருகே பரிதாபம் மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலி நண்பர் படுகாயம்
x
தினத்தந்தி 16 July 2020 4:50 AM GMT (Updated: 2020-07-16T10:20:48+05:30)

கன்னியாகுமரி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலியானார். படுகாயம் அடைந்த அவருடைய நண்பருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கன்னியாகுமரி,

கன்னியாகுமரி அருகே கொட்டாரம் பெருமாள்புரம் இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த பிரான்சிஸ் மகன் சசிகரன் (வயது 34). அதே முகாமை சேர்ந்தவர் ஜெயந்தன் மகன் வெஸ்லி (30). சசிகரனும், வெஸ்லியும் நெருங்கிய நண்பர்கள். இருவரும் ஒன்றாக கூலி வேலைக்கு சென்று வந்தனர்.

தற்போது கொரோனா ஊரடங்கால் வெளியூர்களுக்கு வேலைக்கு செல்ல முடியாமல் இருந்து வந்தனர். தற்காலிகமாக சின்னமுட்டத்துக்கு மீன் சுமைதூக்கும் வேலைக்கு சென்று வந்தனர். இதற்காக இருவரும் ஒரே மோட்டார் சைக்கிளில் செல்வது வழக்கம்.

தடுப்பில் மோதியது

நேற்று அதிகாலை 4.30 மணிக்கு அவர்கள் வழக்கம் போல் மோட்டார்சைக்கிளில் சின்னமுட்டம் நோக்கி புறப்பட்டனர். மோட்டார் சைக்கிளை சசிகரன் ஓட்டினார். வெஸ்லி பின்னால் அமர்ந்திருந்தார்.

மோட்டார்சைக்கிள் கன்னியாகுமரி விவேகானந்தபுரம் பகுதியில் சென்றபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடியது. பின்னர், சாலையில் விபத்துகளை தடுப்பதற்காக வைத்திருந்த தடுப்பில் மோட்டார்சைக்கிள் பயங்கரமாக மோதியது.

வாலிபர் பலி

இதில் சசிகரன், வெஸ்லி ஆகிய 2 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர். அந்த வழியாக வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்சு மூலம் அனுப்பி வைத்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி வெஸ்லி பரிதாபமாக இறந்தார். சசிகரனுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கன்னியாகுமரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story