தஞ்சை பெரியகோவில் முகப்பு பகுதியில் கிடப்பில் போடப்பட்ட கோட்டைச்சுவர் பலப்படுத்தும் பணி மீண்டும் தொடக்கம்


தஞ்சை பெரியகோவில் முகப்பு பகுதியில் கிடப்பில் போடப்பட்ட கோட்டைச்சுவர் பலப்படுத்தும் பணி மீண்டும் தொடக்கம்
x
தினத்தந்தி 20 July 2020 3:17 AM GMT (Updated: 20 July 2020 3:17 AM GMT)

தஞ்சை பெரியகோவில் முகப்பு பகுதியில் கிடப்பில் போடப்பட்ட கோட்டைச்சுவர் பலப்படுத்தும் பணிகள் மீண்டும் தொடங்கி உள்ளது. கருங்கல், செம்மரக்கல் கொண்டு பணிகள் தொடங்கி உள்ளது.

தஞ்சாவூர்,

தஞ்சை பெரியகோவில் உலக பாரம்பரிய சின்னமாக விளங்கி வருகிறது. இந்த கோவில் கி.பி.1010-ம் ஆண்டு கட்டப்பட்டது. இந்த கோவில் கட்டப்பட்டு 1010 ஆண்டுகள் ஆகின்றன. இந்த கோவில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்திய தொல்லியல் துறை பராமரிப்பில் இருந்து வருகிறது.

இந்த கோவில் கும்பாபிஷேகம் கடந்த பிப்ரவரி மாதம் 5-ந்தேதி நடைபெற்றது. இதையொட்டி கடந்த 2 ஆண்டுகளாக பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. கோவில் தரைதளம் சீரமைப்பு, வடக்கு, மேற்கு, தெற்கு, கிழக்கு திருச்சுற்று மண்டபம் ஆகியவை சீரமைக்கப்பட்டன. கோவில் விமான கோபுரம், கேரளாந்தகன் கோபுரம், ராஜராஜன்கோபுரம், அம்மன்கோபுரம் உள்ளிட்ட அனைத்து கோபுரங்களும் சுத்தப்படுத்தப்பட்டு சுதை வேலைப்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டன.

4 கால பூஜைகள்

கோவில் வளாகம், முன்பகுதியில் புல்தரை சீரமைப்பு பணிகளும் நடைபெற்றன. இந்த நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக தஞ்சை பெரியகோவில் கடந்த மார்ச் மாதம் 18-ந்தேதி முதல் மூடப்பட்டன. இதையடுத்து தற்போது வரை பெரியகோவிலில் தினமும் 4 வேளை பூஜைகள் மட்டும் நடைபெற்று வருகின்றன. பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. இங்குள்ள மகாநந்திக்கு பிரதோஷ வழிபாடும் நடைபெற்று வருகின்றன.

இந்த கோவிலை சுற்றிலும் கோட்டைச்சுவர் உள்ளன. பெரியகோட்டைச்சுவர், சின்ன கோட்டைச்சுவர் ஆகியவை உள்ளன. இதில் முன்பகுதியில் உள்ள பெரியகோட்டைச்சுவரையொட்டி அகழி உள்ளது. இதில் கோவில் வலது புறத்தில் உள்ள பெரியகோட்டைச்சுவர் சிதிலமடைந்து காணப்பட்டன. இதையடுத்து கோட்டைச்சுவரின் மேல்பகுதி ஏற்கனவே இருந்தது போல் பழமை மாறாமல் செங்கற்களால் கட்டப்பட்டன. இதையடுத்து கோட்டைச்சுவரை பலப்படுத்தும் வகையில் அடிப்பகுதியை வலுப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட இருந்தன.

பணிகள் தொடங்கியது

இந்த நிலையில் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டதால் இந்த பணிகள் கிடப்பில் போடப்பட்டன. இந்த பணிகள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்றன. இந்த நிலையில் கோட்டைச்சுவரின் அடிப்பகுதி நாளுக்குநாள் சேதம் அடைந்து காணப்பட்டது. இதையடுத்து தற்போது கோட்டைச்சுவரின் அடிப்பகுதியை வலுப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தற்போது 72 மீட்டர் நீளத்திற்கு இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் அடிப்பகுதியில் ஒரு பகுதியாக 1½ மீட்டர் உயரத்துக்கு கருங்கல் கட்டப்படுகின்றன. அதன் மீது மற்றொரு அடுக்காக 2 மீட்டர் உயரத்துக்கு கருங்கல்லால் கட்டப்படுகிறது. அதன் மீது 1½ மீட்டர் உயரத்துக்கு மற்றொரு அடுக்காக செம்மரக்கல்லால் கட்டப்படுகின்றன.

இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், “ஏற்கனவே பணிகள் தொடங்கப்பட்டு மேற்கொள்ளப்பட்டு வந்தன. கும்பாபிஷேக பணிகள் காரணமாக இந்த பணிகள் நிறுத்தப்பட்டன. தற்போது மீண்டும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. கோட்டைச்சுவரின் அடிப்பகுதியை பலப்படுத்தும் வகையில் 3 அடுக்குகளாக இந்த பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன”என்றனர்.

Next Story