கொரோனா நோய் தொற்று உள்ளவர்களை கண்டறிய வீடுகள் தோறும் சென்று விவரங்களை சேகரிக்கும் பணி தொடக்கம் - கலெக்டர் தகவல்


கொரோனா நோய் தொற்று உள்ளவர்களை கண்டறிய வீடுகள் தோறும் சென்று விவரங்களை சேகரிக்கும் பணி தொடக்கம் - கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 22 July 2020 10:15 PM GMT (Updated: 23 July 2020 4:20 AM GMT)

கொரோனா நோய் தொற்று உள்ளவர்களை கண்டறிய வீடுகள் தோறும் சென்று விவரங்களை சேகரிக்கும் பணி தொடங்கி உள்ளதாக கலெக்டர் தெரிவித்தார்.

கடலூர்,

கடலூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவுவதை கட்டுப்படுத்துதல் மற்றும் குறைத்தல் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கண்காணிப்பை தீவிரப்படுத்தி நோய் தொற்று அறிகுறி உள்ளவர்களை கண்டறிந்து அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிப்பதற்கும், நோய் தொற்று பரவல் அதிகமுள்ளதாக அறியப்படும் பகுதிகளில் மருத்துவ முகாம்கள் நடத்துவதையும் நோக்கமாகக் கொண்டு மாவட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் முதற்கட்டமாக நோய் தொற்று அறிகுறி உள்ளவர்களை கண்டறிவதற்காக வீடுகள் தோறும் விவரங்களை பெறும் பணியில் வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள் முதல் நிலை கண்காணிப்பு அலுவலர் என்ற நிலையில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இந்த பணியில் சுமார் 2500-க் கும் மேற்பட்ட களப்பணியாளர்கள், தன்னார்வலர்கள், சுய உதவிக்குழுக்கள், தொண்டு நிறுவனங்களை சேர்ந்த நபர்கள் உள்ளனர். இவர்கள் தொடர்ந்து ஒரு வார காலம் இந்த பணியில் ஈடுபடுவார்கள்.

இந்த பணியாளர்கள், சளி, இருமல், காய்ச்சல், தொண்டை வலி, தொண்டை கரகரப்பு, நுகர்வு மற்றும் சுவை திறன் இழப்பு மற்றும் மூச்சு விடுதலில் சிரமம் போன்ற அறிகுறிகள் உள்ள நபர்களின் விவரங்கள், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், இருதய நோய் மற்றும் சிறுநீரக கோளாறுகள் போன்ற இணை நோய்கள் உள்ளவர்களின் விவரங்களை சேகரிப்பார்கள்.

கொரோனா நோய் தொற்று அறிகுறிகள் மற்றும் இணை நோய் உள்ள நபர்கள் குறித்து தினந்தோறும் சேகரிக்கும் விவரங்களை நோய் தொற்று அறிகுறிகளின் அடிப்படையிலும், இணை நோய்களின் அடிப்படையிலும் ஊராட்சி அளவில் உரிய படிவத்தில் சுருக்க விவரம் தயாரிக்க வேண்டும். அத்துடன் குடும்பம் வாரியான விவரங்கள் சேகரிக்கும் படிவங்களை அன்றைய தினமே ஊரக பகுதிகளில் சம்மந்தப்பட்ட ஊராட்சிகளில் ஊராட்சி மன்ற தலைவரை தலைவராக கொண்டு அமைக்கப்பட்டுள்ள ஊராட்சி அளவிலான கண்காணிப்பு குழுவிற்கு தெரிவிக்க வேண்டும். நகர்ப்புறங்களில் சுகாதார மேற்பார்வையாளரிடம் தெரிவிக்க வேண்டும்.

வட்டார அளவிலான குழு, நகராட்சி மற்றும் பேரூராட்சி அளவிலான குழு பெறப்பட்ட அறிக்கைகளை உடனடியாக பரிசீலித்து தேவையின் அடிப்படையில் முன்னுரிமை அளித்து சிறப்பு முகாம்கள் நடத்தி சளி, இருமல், காய்ச்சல், தொண்டை வலி, தொண்டை கரகரப்பு, நுகர்வு மற்றும் சுவை திறன் இழப்பு மற்றும் மூச்சு விடுதலில் சிரமம் போன்ற அறிகுறிகளுடன் வருவோருக்கு மருத் துவ முகாமிலேயே பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். தொடர்ந்து அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும். மேலும் பொதுமக்கள் அச்சம் தவிர்த்து நோய் பரவலை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

மேற்கண்ட தகவலை கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Next Story