நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தடுப்புபணி தீவிரம்: தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் கலெக்டர் ஆய்வு


நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தடுப்புபணி தீவிரம்: தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 23 July 2020 10:45 AM IST (Updated: 23 July 2020 10:38 AM IST)
t-max-icont-min-icon

நீலகிரி மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்ப ட்ட பகுதிகளில் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா ஆய்வு செய்தார்.

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே தங்காடு ஓரநள்ளி கிராமத்தில் நடந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அதிகம் பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டு வருகிறது. அதைத்தொடர்ந்து மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணி தீவிரம் அடைந்துள்ளது.

ஓரநள்ளி, மஞ்சகொம்பை ஆகிய தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அங்கு நடைபெற்று வரும் மருத்துவ முகாம்களில் அனைவரும் கலந்துகொண்டு பரிசோதனை மேற்கொள்கிறார்களா? காய்ச்சல் உள்ளதா என்று சுகாதாரத் துறையினர் ஆய்வு செய்கிறார்களா, கிருமி நாசினி தெளித்து சுகாதாரப்பணிகள் நடைபெறுகிறதா என்று ஆய்வு மேற்கொண்டார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

வெளி மாவட்டங்களில் இருந்து நீலகிரி மாவட்டத்துக்கு வருகை புரிபவர்கள் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. அவ்வாறு வருபவர்களுக்கு சளி, காய்ச்சல் போன்ற அறிகுறி இருந்தால் சோதனை சாவடிகளில் சுகாதார குழுக்கள் மூலம் உடனடியாக சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்படுகிறது. நீலகிரி மாவட்டத்தில் இதுவரை 28 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. நோயின் அறிகுறி கண்டறியப்பட்டு 176 இடங்களை கண்டறிந்து அப்பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டு சுகாதாரத்துறை, உள்ளாட்சித்துறை மற்றும் பல்வேறு துறைகள் இணைந்து வீடு வீடாக கண்காணிக்கப்படுகிறது.

கிருமிநாசினி கொண்டு தினமும் சுத்தம் செய்யப்பட்டு வருகிறது. வெளியாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளுக்கு செல்லாதவாறு காவல்துறை மூலம் கண்காணிக்கப்படுகிறது. குறிப்பாக அரசு தெரிவிக்கும் நெறிமுறைகளுக்கு உட்பட்டு திருமணம், துக்க நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும் இனி வரும் காலங்களில் பொது மக்கள் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட திருமணங்களை தவிர்த்து, இல்ல நிகழ்ச்சிகளையும் நடத்த கூடாது. அனுமதி பெற்ற நிகழ்ச்சியின்போது சமூக இடைவெளி, முகக்கவசம், கிருமிநாசினி உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றி நடத்த வேண்டும்.

இதர நிகழ்ச்சிகள் நடத்துபவர்கள் மீது கடும் நடவடிக் எடுக்கப்படும். நோய் அறிகுறிகள் ஏதேனும் இருப்பின் பொதுமக்கள் அருகே உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது அரசு மருத்துவமனையை அணுகி பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்பட அனைத்து பகுதிகளிலும் சுகாதாரத்துறை சார்பில் நடமாடும் வாகனங்களில் இலவச மருத்துவ பரிசோதனைகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட நபர்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. 4 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள கிராமங்கள் தோறும் ஒரு நாளைக்கு 20 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. முகாமில் அறிகுறி தென்பட்டால் உடனடியாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும். பொதுமக்கள் அனைவரும் இதை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின் போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரமேஷ், சந்திரசேகர், குந்தா தாசில்தார் மகேஸ்வரி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Next Story