பெரம்பலூர் மாவட்டத்தில் விதை வெங்காயத்துக்கு கடும் தட்டுப்பாடு விவசாயிகள் கவலை


பெரம்பலூர் மாவட்டத்தில் விதை வெங்காயத்துக்கு கடும் தட்டுப்பாடு   விவசாயிகள் கவலை
x
தினத்தந்தி 29 July 2020 6:30 AM GMT (Updated: 29 July 2020 6:30 AM GMT)

பெரம்பலூர் மாவட்டத்தில் விதை வெங்காயத்துக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

பெரம்பலூர், 

3 மாத கால பயிரான சின்ன வெங்காயம் சாகுபடியில் தமிழகத்தில் பெரம்பலூர் மாவட்டம் தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது. இங்குள்ள பெரும்பாலான விவசாயிகள் கிணற்று பாசனம் மூலம் சின்ன வெங்காய சாகுபடியில் ஈடுபடுகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர், ஆலத்தூர் ஆகிய தாலுகாக்களில் சின்ன வெங்காயம் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. சின்ன வெங்காயம் பெரம்பலூரில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கும், வெளிமாநிலங்களுக்கும் விற்பனைக்காக கொண்டு செல்லப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு மாவட்டத்தில் இதுவரை சுமார் 25 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

இங்கு உற்பத்தியாகும் சின்ன வெங்காயம் அதிக முளைப்பு திறன், துரித வளர்ச்சி, கூடுதல் மகசூல் தரக்கூடியது என்பதோடு மட்டுமின்றி, அனைத்து வகை மண்ணிலும் விளையக்கூடியது என்பதால் தமிழகம் மட்டுமின்றி, வெளி மாநிலங்களில் இருந்தும் விவசாயிகள், வியாபாரிகள் வந்து இங்கு பட்டறைகளில் பதப்படுத்தும் விதைகளை விரும்பி வாங்கி செல்வதால், பெரம்பலூர் மாவட்டத்தில் மொத்த உற்பத்தியில் 80 சதவீத சின்ன வெங்காயம் விதைக்காகவே பட்டறைகளில் சேமிக்கப்படுவது வழக்கமாகிவிட்டது.

விதை வெங்காயத்துக்கு கடும் தட்டுப்பாடு

இதனால் கர்நாடகம் உள்ளிட்ட வெளி மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் பெரம்பலூர் மாவட்டத்துக்கு வந்து விதை வெங்காயத்தை வாங்கி செல்வதால், மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வெங்காய பட்டறைகள் காலியாகி வருகிறது. தற்போது உள்ளூர் சாகுபடிக்கே விதை வெங்காயத்துக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மேலும் ஆலத்தூர் தாலுகாவில் பட்டறையில் சேமித்து வைக்கப்படும் விதை வெங்காயத்தை மர்மநபர்கள் திருடி செல்லும் அவல நிலையும் தொடர்கிறது.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், கொரோனா ஊரடங்கினால் கடந்த சில மாதங்களாக சரியான விலை கிடைக்காததால் மற்ற மாவட்டங்களில் சின்ன வெங்காய சாகுபடி வெகுவாக குறைந்துள்ளது. இதனால் வெளி மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள், வியாபாரிகள் குறிப்பாக பெரம்பலூர் மாவட்டத்தில் முகாமிட்டு பட்டறையில் சேமித்து வைக்கப்பட்டுள்ள விதை வெங்காயத்தை வாங்கி சென்று பயிரிட்டு வருகின்றனர். இதனால் இன்னும் சில மாதங்களில் மீண்டும் சின்ன வெங்காயத்துக்கு கடும் கிராக்கி ஏற்பட்டு, அதன் விலை உயரும்.

நிலையான விலை

மேலும் ஊரடங்கினால் வெளியில் இருந்து வரும் சின்ன வெங்காய வரத்து குறைந்ததால், விதை பட்டறைகள் அனைத்தையும் உணவு தேவைக்காக உள்ளூர் சிறு வியாபாரிகள் கொள்முதல் செய்வதால் இந்த திடீர் தட்டுப்பாடு நிலவுகிறது. கொரோனா ஊரடங்கினால் தமிழகத்தில் உள்ள முக்கியமான காய்கறி மார்க்கெட்டுகள் மூடப்பட்டுள்ளதால், தற்போது அறுவடையாகும் சின்ன வெங்காயம் கிலோ ரூ.20 முதல் ரூ.30 வரை கொள்முதல் செய்யப்படுகிறது. இதனால் சின்ன வெங்காயம் பயிரிட்ட விவசாயிகள் வாழ்வாதாரம் பாதித்துள்ளது. சின்ன வெங்காயத்துக்கு நிலையான கொள்முதல் விலையை அறிவிக்க மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். செட்டிகுளத்தில் முடங்கி கிடக்கும் சின்ன வெங்காயம் விற்பனை மையத்தையும், குளிர்பதன கிடங்கையும் மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்றனர்.

Next Story