மாவட்டம் முழுவதும் பரவலாக மழை அதிகபட்சமாக லக்கூரில் 60 மி.மீட்டர் பதிவானது
மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. இதில் அதிகபட்சமாக லக்கூரில் 60 மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
கடலூர்,
வளிமண்டல மேலடுக்கு சுழற்சியாலும், வெப்பச்சலனம் காரணமாகவும் தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
அதன்படி கடலூரில் நேற்று முன்தினம் மாலை மழை பெய்யத்தொடங்கியது. சுமார் 30 நிமிடத்துக்கும் மேலாக நீடித்த இந்த மழை பிறகு ஓய்ந்திருந்தது. இதற்கிடையே இரவு 10 மணி அளவில் மீண்டும் இடி-மின்னலுடன் மழை பெய்யத் தொடங்கியது. இந்த மழை சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. அதன் பிறகு விடிய விடிய தூறிக்கொண்டே இருந்தது.
நெல் மூட்டைகள் சேதம்
மேலும் நேற்று காலை முதல் மதியம் வரை அவ்வப்போது விட்டு விட்டு மழை தூறிக்கொண்டே இருந்தது. இதனால் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீர் தாழ்வான பகுதிகளில் குளம்போல் தேங்கியது. பல்வேறு இடங்களில் குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்தது.
விருத்தாசலம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை மழை பெய்தது. இந்த மழையால் அங்குள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் குவித்து வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் அனைத்து மழையில் நனைந்து சேதமானது. மேலும் பல இடங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் மழையால் சாய்ந்தன. இதனால் அவற்றை அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
லக்கூரில் அதிகபட்சம்
இதேபோல் சிதம்பரம், பரங்கிப்பேட்டை, பண்ருட்டி, புவனகிரி, காட்டுமன்னார்கோவில், குறிஞ்சிப்பாடி மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. இருப்பினும் நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக லக்கூரில் 60 மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளது. மாவட்டத்தின் மற்ற இடங்களில் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-
மே.மாத்தூர்- 56, காட்டுமன்னார்கோவில்- 49.30, லால்பேட்டை-40, கீழ்செருவாய்- 40, வேப்பூர்- 39, காட்டுமயிலூர்- 38, ஸ்ரீமுஷ்ணம்- 35.10, பரங்கிப்பேட்டை- 34, பெலாந்துறை- 33.40, அண்ணாமலைநகர்- 27.20, சேத்தியாத்தோப்பு- 25.40, சிதம்பரம், குப்பநத்தம் தலா -24.20, கடலூர்- 23.60, விருத்தாசலம்- 23, புவனகிரி- 21, கொத்தவாச்சேரி- 16, குறிஞ்சிப்பாடி, வானமாதேவி, தொழுதூர் தலா -14, பண்ருட்டி- 9, வடக்குத்து- 3.
இதேபோல் காட்டுமன்னார்கோவில் அருகே செட்டிதாங்கல், மேலக்கடம்பூர், வேளப்பூண்டி, ரெட்டியூர், அருண்மொழிதேவன், ஆயங்குடி, எய்யலூர், புளியம்பட்டு, ஷண்டன் உள்ளிட்ட பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டிருந்த நெற்பயிர்களும் பலத்த மழையால் சாய்ந்து சேதமடைந்தன.
Related Tags :
Next Story