108 ஆம்புலன்ஸ் வர தாமதமானதால் காரில் கர்ப்பிணியை அழைத்து சென்ற போது பிறந்த குழந்தை சாவு - ஆரம்ப சுகாதார நிலையத்தை உறவினர்கள் முற்றுகை


108 ஆம்புலன்ஸ் வர தாமதமானதால் காரில் கர்ப்பிணியை அழைத்து சென்ற போது பிறந்த குழந்தை சாவு - ஆரம்ப சுகாதார நிலையத்தை உறவினர்கள் முற்றுகை
x
தினத்தந்தி 31 July 2020 9:45 PM GMT (Updated: 1 Aug 2020 1:38 AM GMT)

வேளாங்கண்ணி அருகே 108 ஆம்புலன்ஸ் வர தாமதமானதால் காரில் கர்ப்பிணியை அழைத்து சென்ற போது பிறந்த குழந்தை உயிரிழந்தது. டாக்டர் இல்லாததால் தான் குழந்தை உயிரிழந்ததாக ஆரம்ப சுகாதார நிலையத்தை உறவினர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

வேளாங்கண்ணி,

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே வடுகச்சேரி மாரியம்மன் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் அருள்தாஸ். விவசாயி. இவருடைய மனைவி மகாலட்சுமி( வயது21). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த மகாலட்சுமிக்கு பிரசவவலி ஏற்பட்டதால் வடுகச்சேரியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அருள்தாஸ் சம்பவத்தன்று அழைத்து சென்றுள்ளார். அப்போது அங்கு டாக்டர் இல்லை என பணியில் இருந்த ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

உடனே நாகை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் ஆம்புலன்ஸ் வர காலதாமதமானதால் ஒரு காரில் மகாலட்சுமியை, அருள்தாஸ் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அப்போது நரியங்குடி என்ற இடத்தில் சென்றபோது காரிலேயே மகாலட்சுமிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

பின்னர் குழந்தையையும், மகாலட்சுமியையும் நாகை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தாயையும், குழந்தையையும் டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். இதில் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த மகாலட்சுமியின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள், டாக்டர் இல்லாததால் தான் குழந்தை இறந்தது என கூறி வடுகச்சேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு இறந்த குழந்தை உடலுடன் வந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த கீழையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயந்தி, வட்டார மருத்துவ அலுவலர் ராமசாமி மற்றும் பணியாளர்கள் சம்பவ இடத்துக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் வடுகச்சேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு டாக்டர் நியமிக்கப்படும் என்றும், 108 ஆம்புலன்ஸ் சுகாதார நிலையத்திலேயே நிறுத்தி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதை தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். மகாலட்சுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story