ஆடிப்பெருக்கை முன்னிட்டு பூக்கள் விலை கிடுகிடு உயர்வு


ஆடிப்பெருக்கை முன்னிட்டு பூக்கள் விலை கிடுகிடு உயர்வு
x
தினத்தந்தி 2 Aug 2020 3:30 AM IST (Updated: 2 Aug 2020 8:07 AM IST)
t-max-icont-min-icon

ஆடிப்பெருக்கை முன்னிட்டு திண்டுக்கல்லில் பூக்கள் விலை கிடுகிடுவென உயர்ந்தது.

திண்டுக்கல்,

தமிழ் மாதங்களில் ஆடியை திருவிழா மாதம் என்று கூறுவார்கள். இந்த மாதத்தில் அம்மன் கோவில்களில் திருவிழா நடைபெறும். பெண்கள் விரதம் இருந்து வழிபாடு செய்வார்கள். மேலும் ஆடிப்பெருக்கு என்பது ஆடி மாதத்தில் வரும் மற்றொரு முக்கிய தினமாகும். இந்த நாளில் புதிய முயற்சியை மேற்கொள்வதை பலரும் விரும்புவார்கள். அதேபோல் திருமணமான பெண்கள் தாலி பாக்கியம் நிலைக்க வேண்டியும், கன்னி பெண்கள் நல்ல வரன் அமைய வேண்டியும் வழிபாடு செய்வார்கள். இதற்காக நீர்நிலைகளில் நீராடிவிட்டு, அதற்கு அருகில் இருக்கும் கோவில்களில் வழிபடு செய்வார்கள். அதன்படி இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஆடிப்பெருக்கு தினம் ஆகும்.

ஆனால், ஊரடங்கு காரணமாக பெரிய கோவில்கள் திறக்கப்படவில்லை. மேலும் மக்கள் ஓரிடத்தில் அதிக அளவில் கூடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆடிப்பெருக்கு தினத்தில் திண்டுக்கல்லில் மக்கள் வீடுகளில் வழிபாடு செய்வதற்கு தயாராகினர். இதற்காக பூக்கள், பழம், மஞ்சள், குங்குமம் உள்பட பூஜைக்கு தேவையான பொருட்களை நேற்றே வாங்கினர். இவற்றில் பூக்களின் விற்பனை அதிகமாக இருந்தது.

ஊரடங்கு காரணமாக திருமணம், கோவில் திருவிழா போன்றவை நடைபெறவில்லை. இதன் காரணமாக கடந்த 4 மாதங்களாக பூக்களின் விற்பனை மந்தமாக காணப்பட்டது. ஆனால், ஆடிப்பெருக்கை முன்னிட்டு நேற்று திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் பூக்கள் அதிக அளவில் விற்பனை ஆனது. இதனால் விலையும் கிடுகிடுவென உயர்ந்தது.

இதில் கிலோ ரூ.100-க்கு விற்ற மல்லிகை பூ நேற்று ராக்கெட் வேகத்தில் உயர்ந்து ரூ.1,000-க்கும், முல்லைப்பூ ரூ.450-க்கும், கனகாம்பரம் ரூ.350-க்கும் விற்பனை ஆனது. மேலும் ரூ.200-க்கு விற்ற சாதிப்பூ ரூ.400-க்கும், ரூ.20-க்கு விற்ற அரளி ரூ.150-க்கும், ரோஜா ரூ.80-க்கும் விற்பனை ஆகின. நீண்ட நாட்களுக்கு பின்னர் பூக்கள் அதிக அளவில் விற்றதோடு, விலையும் உயர்ந்ததால் விவசாயிகளும், வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.

Next Story