நெல்லையில் பெண்ணிடம் நகை பறிக்க முயற்சி: மோட்டார் சைக்கிளில் ‘போலி நம்பர் பிளேட்’ பொருத்திய கொள்ளையர்கள்


நெல்லையில் பெண்ணிடம் நகை பறிக்க முயற்சி: மோட்டார் சைக்கிளில் ‘போலி நம்பர் பிளேட்’ பொருத்திய கொள்ளையர்கள்
x
தினத்தந்தி 5 Aug 2020 1:46 AM GMT (Updated: 5 Aug 2020 1:46 AM GMT)

நெல்லையில் அரிவாளை காட்டி பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற கொள்ளையர்கள், தங்களது மோட்டார் சைக்கிளில் போலி நம்பர் பிளேட் பயன்படுத்தியது தெரியவந்து உள்ளது. அவர்களை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

நெல்லை,

நெல்லை பேட்டை காந்திநகரை சேர்ந்தவர் சண்முகநாதன், ஆட்டோ டிரைவர். இவருடைய மனைவி செல்வரத்தினம் (வயது 57). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு காலையில் வீட்டு முன்பு கோலம் போட்டுக் கொண்டிருந்தார். அப்போது ஒரு மோட்டார் சைக்கிளில் 3 கொள்ளையர்கள் வந்தனர். அவர்களில் 2 பேர் கீழே இறங்கி, செல்வரத்தினத்திடம் முகவரி கேட்பது போல் நடித்து, அரிவாளை காட்டி மிரட்டி நகையை பறிக்க முயன்றனர். அப்போது அவரது அபயக்குரலை கேட்டு, வீட்டுக்குள் இருந்த அவருடைய மகன் நடராஜன் (30) மற்றும் பக்கத்து வீட்டில் இருப்பவர்கள் வெளியே ஓடி வந்தனர்.

இதையடுத்து கொள்ளையர்கள் நகை பறிக்கும் முயற்சியை கைவிட்டு மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பி செல்ல முயன்றனர். அப்போது நடராஜன் விரட்டிச்சென்று அவர்களை பிடிக்க முயன்றார். உடனே கொள்ளையர்களில் ஒருவன் நடராஜனை அரிவாளால் வெட்ட முயன்றார். இதனால் நடராஜன் கீழே விழவே, கொள்ளையர்கள் 3 பேரும் மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பிச்சென்று விட்டனர். இந்த காட்சிகள் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. அந்த காட்சி சமூக வலைதளத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

போலி நம்பர் பிளேட்

இதுதொடர்பாக டவுன் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சியை ஆய்வு செய்து, அதில் காணப்பட்ட 3 பேர் மற்றும் அவர்களது மோட்டார் சைக்கிள் பதிவு எண்ணை கொண்டு விசாரணையை தொடங்கினர்.

இதுதொடர்பாக போலீசார் நெல்லை அருகே உள்ள வல்லவன்கோட்டை மற்றும் பல்வேறு பகுதிகளுக்கு சென்றதாக கூறப்படுகிறது. போலீசாரின் விசாரணையில், கொள்ளை முயற்சி சம்பவத்துக்கும், வல்லவன்கோட்டை ஊருக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்பது தெரியவந்தது. மேலும், நெல்லை பகுதியைச் சேர்ந்த ஒருவரின் மோட்டார் சைக்கிள் பதிவு எண்ணை போலியாக கொள்ளையர்கள் தங்களது மோட்டார் சைக்கிளில் பொருத்தி கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

தேடுதல் வேட்டை

அதே நேரத்தில், கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ள 3 பேரின் உருவத்தை கொண்டு கொள்ளையர்களை அடையாளம் காண போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், பழைய குற்றவாளிகள் யாரேனும் இந்த சம்பவத்தில் ஈடுபட்டார்களா? என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது. எனவே, தனிப்படை போலீசார் கொள்ளையர்களை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

Next Story