மாவட்டம் விட்டு மாவட்டம் செல்பவர்களுக்கு உடனடியாக இ-பாஸ்கள் வழங்க கலெக்டர்களுக்கு அரசு உத்தரவு - அமைச்சர் கே.சி.வீரமணி தகவல்
மாவட்டம் விட்டு மாவட்டம் செல்பவர்களுக்கு இ-பாஸ்களை உடனடியாக வழங்க மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என அமைச்சர் கே.சி. வீரமணி தெரிவித்தார்.
திருப்பத்தூர்,
திருப்பத்தூரில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டு வருகிறது. அதனை ஒட்டி கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க குனிச்சி அரசு மருத்துவமனையில் புதிதாக 35 படுக்கை அறையும், கந்திலி அருகே கரியம்பட்டியில் உள்ள அரசு திருவள்ளூர் கலைக்கல்லூரி விடுதியில் 65 படுக்கை அறையும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அதனை வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் கே.சி.வீரமணி, மாவட்ட கலெக்டர் சிவன்அருள் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர். அப்பொழுது அங்கு ஏற்படுத்தப்பட்டுள்ள அவசர சிகிச்சை மையம், படுக்கை வசதிகள் தரமாக உள்ளதா? கழிவறைகள் குழாய்களில் தண்ணீர் வருகிறதா மருத்துவமனையில் மருந்து மாத்திரைகள் போதிய அளவில் உள்ளதா என சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர் கே.எஸ்.டி.சுரேஷ், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் தீபா ஆகியோரிடம் அவர் கேட்டறிந்தார்.
அப்போது திட்ட அலுவலர் மகேஷ்பாபு, ஊராட்சிகள் உதவி இயக்குனர் அருண், முன்னாள் எம்.எல்.ஏ. கே.ஜி.ரமேஷ், நகரச் செயலாளர் டி.டி.குமார், கந்திலி ஜெயலலிதா பேரவை செயலாளர் ஆர்.ஆறுமுகம் உள்பட பலர் உடன் இருந்தனர்.
பின்னர் அமைச்சர் கே.சி.வீரமணி நிருபர்களிடம் கூறியதாவது:-
திருப்பத்தூர் மாவட்டத்தைப் பொருத்தவரை 1,503 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதில் 953 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உளளனர். 550 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்ட நிர்வாகம் மூலம் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உயர் தர சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. 35 ஆயிரம் பேருக்கு இது வரை கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
மாவட்டம் விட்டு மாவட்டம் செல்பவர்களுக்கு இ-பாஸ் வழங்கும் நடைமுறை எளிமையாக்கப்பட்டுள்ளது. இதன்படி உரிய காரணங்களுக்கு செல்பவர்களுக்கு மாவட்ட கலெக்டர் உடனடியாக இ-பாஸ் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்தவர்கள் குறித்து தினமும் மூன்று முறை வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. ஆளுங்கட்சி மிக சிறப்பாக செயல்படுவதை பொறுத்துக் கொள்ள முடியாமல் தி.மு.க.வினர் பொய் பிரசாரம் செய்கிறார்கள்.
அ.தி.மு.க.வில் 15 ஊராட்சிகளுக்கு ஒரு ஒன்றியச் செயலாளர் வீதம் விரைவில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் அறிவிப்பு வெளியிடுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story